

விவசாயிகள் - பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மண்ணச்சநல்லூரில் புதிதாக உழவர்சந்தை அமைக்கப்பட உள்ளது. மேலும், கே.கே.நகர், மணப்பாறை உழவர் சந்தைகள் சீரமைக்கப்பட உள்ளன.
விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்யக்கூடிய விளைபொருட்களை இடைத்தரகர்களின்றி நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்வதற்காக உழவர் சந்தை திட்டம் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியால் கடந்த 1999-ல் தொடங்கப்பட்டது. இதன்படி திருச்சி மாவட்டத்தில், தென்னூர் அண்ணாநகர், கே.கே.நகர், முசிறி, துறையூர், திருவெறும்பூர், லால்குடி, மணப்பாறை ஆகிய 7 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன.
புத்துயிரூட்டும் பணிகள்
இதற்கிடையே அதிமுக ஆட்சி காலத்தில் உழவர் சந்தைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், உழவர் சந்தை திட்டத்துக்கு புத்துயிரூட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள உழவர்சந்தைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் தொடர்பாகவும், புதிதாக உழவர்சந்தைகளை உருவாக்குவது தொடர்பாகவும் வேளாண்மை விற்பனைக் குழு மூலம் கணக்கெடுப்பு நடத்தி அரசுக்கு அளிக்கப்பட்டது.
சீரமைப்புக்கு ரூ.61.26 லட்சம்
அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் முதற்கட்டமாக 50 உழவர் சந்தைகளை சீரமைக்க ரூ.12.50 கோடி, புதிதாக 10 உழவர் சந்தைகளை உருவாக்க ரூ. 6 கோடி ஒதுக்கப்படும் என கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூரில் புதிய உழவர்சந்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டு, அதற்காக ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல திருச்சி கே.கே.நகர் உழவர்சந்தையை சீரமைக்க ரூ.35.72 லட்சம், மணப்பாறை உழவர் சந்தையை மேம்படுத்த ரூ.25.34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முன்மாதிரி உழவர்சந்தை
இதுகுறித்து துணை இயக்குநர் (வேளாண்மை - வணிகம்) கு.சரவணனிடம் கேட்டபோது, “மண்ணச்சநல்லூரில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் புதிதாக உழவர்சந்தை உருவாக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக 17 கடைகள் அமைய உள்ளன. இதேபோல கே.கே.நகர் உழவர்சந்தை, மாவட்டத்திலேயே முன்மாதிரி உழவர் சந்தையாக மாற்றப்பட உள்ளது. இங்குள்ள பழைய கட்டுமானங்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பழைய மேற்கூரைகளை அகற்றிவிட்டு புதிதாக அமைப்பது, குண்டும், குழியுமான தரைத்தளத்தை அகற்றிவிட்டு பேவர் பிளாக் தளம் அமைப்பது, கூடுதலான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்து கொடுப்பது, ஒவ்வொரு கடைக்கும் எலெக்ட்ரானிக் தராசு பொருத்துவது, மழைநீர் புகாத வகையில் புதிய சுற்றுச்சுவர் எழுப்புவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இம்மாதத்துக்குள் இப்பணிகள் தொடங்கி, அடுத்த 3 மாத காலத்துக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.