கதிர் அறுவடை இயந்திரத்துக்கு வாடகை நிர்ணயம்: ஆட்சியர் உத்தரவு

கதிர் அறுவடை இயந்திரத்துக்கு வாடகை நிர்ணயம்: ஆட்சியர் உத்தரவு
Updated on
1 min read

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கதிர் அறுவடை இந்திரத்துக்கு வாடகை நிர்ணயம் செய்து ஆட்சியர் இன்று (ஜன.1) உத்தரவிட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடையும் தொடங்கி உள்ளது. இயந்திரம் மூலம் மட்டுமே அறுவடை செய்யப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை வேளாண் பொறியியல் துறையிடம் ஒரு அறுவடை இயந்திரம் மட்டுமே உள்ளது.

ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் அறுவடை இயந்திரங்கள் தேவைப்படுவதால், தனியார் இயந்திர உரிமையாளர்கள் இரு மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர். இதைத் தடுப்பதற்கு, தனியார் அறுவடை இயந்திரங்களுக்கு உரிய வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என கடந்த மாதம் 29-ம் தேதி புதுக்கோட்டையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் ஆட்சியர் கவிதா ராமுவிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியரும் உறுதி அளித்தார். அதன்படி, வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள், முன்னோடி விவசாயிகள் மற்றும் தனியார் கதிர் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் ஆகியோரைக் கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையின் மூலம் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது.

இது குறித்து ஆட்சியர் கவிதா ராமு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வெளி மாவட்டங்களில் இருந்து கூடுதலாக தனியார் நெல் அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. மணிக்கு செயின் வகை இயந்திரத்துக்கு ரூ.2,200-வீதமும், டயர் வகை இயந்திரத்துக்கு ரூ.1,600-வீதமும் விவசாயிகளிடம் இருந்து கட்டணமாக வசூலிக்க வேண்டும்.

இதைவிட கூடுதலாக வாடகை வசூலிப்பதாக புகார் வந்தால் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவிர, வேளாண் பொறியியல் துறை மூலம் இயக்கப்படும் செயின் வகை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ.1,630 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு உதவி செயற்பொறியாளர்களிடம் 99944 05285 (புதுக்கோட்டை), 94436 04559 (அறந்தாங்கி) ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in