

கிருஷ்ணகிரி மாவட்டம் சுண்டேகுப்பம் நாட்டான்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன்(28). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கிருஷ்ணகிரிக்கு சொந்த ஊருக்கு வந்தபோது, சேட்டிலைட் போனை உடன் எடுத்து வந்தார். வீட்டில் தன் உறவினர்களிடம் போனை காட்டி ஆன் செய்துள்ளார். சார்ஜ் இல்லாத காரணத்தால் அது ஆப் ஆகிவிட்டது.
இந்நிலையில் சென்னையில் உள்ள க்யூ பிரிவு காவல்துறையினர் வைத்திருந்த ஜிபிஆர்எஸ் கருவியில், கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் சேட்டிலைட் போன் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, கிருஷ்ணகிரியில் உள்ள க்யூ பிரிவு காவல்துறையினருக்குத் தகவல் தெரி வித்தனர். கிருஷ்ணகிரி பகுதியில் வெளி நாடு சென்றுள்ளவர்கள் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்து விசாரணை செய்து வந்தனர். தகவலறிந்த மதியழகன், தன்னிட மிருந்த 5-க்கும் மேற்பட்ட செல்போன்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.
அதனை போலீஸார் சென்னைக்கு ஆய்வுக்கு அனுப்பியதில், மதியழகன் வைத்திருந்த போன்களில் ஒன்று சேட்டிலைட் போன் என்பது உறுதியானது. இதையடுத்து க்யூ பிரிவு காவல்துறையினர் காவேரிப்பட்டணம் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில், வழக்கு பதிவு செய்து மதியழகனை கைது செய்து, விசாரணைக்குப் பின் அவரை விடுவித்தனர்.
இதுகுறித்து ‘தி இந்து’-விடம் மதியழகன் கூறும்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவ வீரர்கள் பயன்படுத்திய செல்போன்கள் பழுதாகி வீசிச் சென்றதைத் தவறுதலாக எடுத்து வந்துவிட்டேன். இந்த அளவுக்குப் பிரச்சினை ஏற்படும் என தெரியாது என்றார்.
காவல்துறையினர் கூறும்போது, ‘இந்தியாவில் சேட்டிலைட் போன்களை பயன்படுத்த இந்தியன் டெலிகிராப் சட்டம் 1885-ன் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வகை சேட்டிலைட் போன்களை தீவிரவாதிகள் பயன்படுத்தி தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்வதால், பாதுகாப்பு காரணங்களுக்காக அவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது’ எனத் தெரிவித்தனர்.