

பிரான்ஸில் தற்போது ஒமைக்ரான் ஆதிக்கம் செலுத்தி வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிரான்ஸ் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “பிரான்ஸில் கடந்த சில வாரமாக ஒமைக்ரான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கரோனா பரிசோதனை முடிவுகளில் 60% வரை ஒமைக்ரான் மாறுபாடுடன் ஒத்திருக்கின்றன. இது கடந்த வாரத்தைவிட 15% அதிகம்” என்று தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸில் மீண்டும் கரோனா பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிவரும் சூழலில், ஐரோப்பிய நாடுகள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியில் அக்கறை காட்டி வருகின்றன. இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களே அதிகம் பாதிக்கப்படுவதால் தடுப்பூசி எதிர்ப்பாளர்களைச் சரிகட்டும் முயற்சியிலும் ஐரோப்பிய நாடுகள் இறங்கியுள்ளன.
உலக அளவில் கடந்த வாரம் கரோனா தொற்று 11 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கரோனா தொற்று கடந்த வாரம் மட்டும் 38% வரை தொற்று அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து மெல்ல மெல்ல அதிகரித்து வந்த கரோனா தொற்று, ஒமைக்ரான் கண்டறியப்பட்ட பின், பரவலில் வேகமெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.