

தமிழகத்தின் பிரசித்திப் பெற்ற சுற்றுலாத் தலங்களைவிவரிக்கும் விதமாகக் கண்கவர் புகைப்படங்களுடன் புதிய காலண்டரை சுற்றுலாத் துறை வெளியிட்டுள்ளது.
உலகின் பழமையான கலாச்சாரம், பாரம்பரியம், நினைவுச் சின்னங்கள், சிறப்பான கோயில் கட்டிடக்கலை, நிலப்பரப்புகளும், வனங்களும் கொண்டுள்ளது தமிழகம். ஆனாலும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பதமிழக சுற்றுலாத் துறையின் செயல்பாடுகள் பொதுமக்களிடம் முறையாகச் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டநாட்களாகவே இருந்து வருகிறது.
குறிப்பாக, ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தமிழக சுற்றுலாத் தலங்களை விவரிக்கும் வகையில் பதிவிடப் புகைப்படங்கள் சுற்றுலாத் துறையிடம் கைவசம் இல்லை. இதனைச் சரி செய்யும் விதமாக, சுற்றுலாத் தலங்களை வித்தியாசமான கோணத்தில் புகைப்படம் எடுக்க, புகைப்பட கலைஞர்களுக்கு தமிழக சுற்றுலாத் துறை அழைப்பு விடுத்திருந்தது.
அதில், பொள்ளாச்சியைச் சேர்ந்த 25 வயதேஆன புகைப்படக் கலைஞர் ஆகாஷ் செல்வன், கழுகுப்பார்வையில் எடுத்த புகைப்படங்களில், 12 பிரசித்தி பெற்ற இடங்களை ஒன்றிணைத்து, அவை எங்கு இருக்கிறது என்பது உள்ளிட்ட தகவல்களுடன் வருட காலண்டர் ஒன்றை சுற்றுலாத் துறை உருவாக்கியுள்ளது. இது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தக் காலண்டரில் தனுஷ்கோடியின் அரிச்சல் முனை, மதுரை வண்டியூர் தெப்பக்குளம், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் படகுகள், உதகைநீலகிரி தொடர்வண்டிப் போக்குவரத்து, நாமக்கல் கொல்லி மலை கொண்டை ஊசி வளைவு, திருச்சி மலைக் கோட்டையுடன் சுற்றுப்புற வீடுகள், பொள்ளாச்சி டாப்ஸ்லிப் யானைகள் முகாமில் உற்சாக குளியல் போடும் யானை, கோவளம் கடலில் அலைச்சறுக்கு செய்யும் வீரர், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், தூத்துக்குடி குலசை தசரா விழாவின் ஒருபகுதி, தென்காசியின் வயல்வெளிகள், கடலூர் பிச்சாவரம் சதுப்புநிலக் காடு ஆகியவை இடம்பெற்றுள்ளன.
கண்ணைக் கவரும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள இந்தக் காலண்டரை அரசு அலுவலர்கள் போட்டிபோட்டுக் கொண்டு வாங்கி வருகின்றனர். மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த காலண்டர்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதன் மூலம்,சுற்றுலாத் துறைக்கு வருவாய் கிடைப்பதுடன், தமிழகசுற்றுலாத் தலங்களை இலவசமாகப் பிரபலப்படுத்தவும் முடியும். எனவே, பொதுமக்களுக்கு காலண்டரை விற்பனை செய்ய சுற்றுலாத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.