17-ம் கட்டமாக 50 ஆயிரம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம்
தமிழகம் முழுவதும் 17-வது கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் நாளை நடக்கிறது.
புதிதாக உருமாறிய ஒமைக்ரான் கரோனா வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் 1,200-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு 50-ஐ நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதனால், தமிழகத்தில் கரோனாதடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 16 கட்டமாக மெகா தடுப்பூசி முகாம்கள்நடத்தப்பட்டுள்ளன. வீடுகளுக்குசென்றும் தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை 87 சதவீதத்தினருக்கு முதல் தவணையும், 57 சதவீதத்தினருக்கு 2 தவணைகளும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், 17-வது மெகாதடுப்பூசி முகாம் நாளை (ஞாயிறு)தமிழகம் முழுவதும் 50 ஆயிரம்இடங்களில் நடக்க உள்ளது. சென்னையில் மட்டும் 1,600இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படு கிறது.
இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறும்போது, “மெகா தடுப்பூசி முகாம் வாரம்தோறும் சனிக்கிழமை நடந்து வருகிறது. இந்த வாரம் சனிக்கிழமை (இன்று)புத்தாண்டு என்பதால் முகாம் ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் முதல் வழக்கம்போல், சனிக்கிழமையில் முகாம் நடத்தப்படும். ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை பொதுமக்கள் விரைவாக செலுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.
