Published : 01 Jan 2022 08:06 AM
Last Updated : 01 Jan 2022 08:06 AM

நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை ஏமாற்றுகின்றனர்; திமுகவின் தொண்டர் படையாக காவல் துறை மாறிவிட்டது: ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அதிமுக புகார்

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான காவல் துறை திமுகவின்தொண்டர் படையாக மாறிவிட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அதிமுக சட்டக்குழு புகார் அளித்துள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை, அதிமுக சட்டப்பிரிவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தளவாய் சுந்தரம், மனோஜ் பாண்டியன், முன்னாள் எம்எல்ஏக்கள் இன்பதுரை, பாபு முருகவேல் உள்ளிட்டோர் சந்தித்து தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் அதிமுகவினர் மீதான வழக்குகள் குறித்து மனு அளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் சி.வி.சண்முகம் கூறியதாவது:

தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, காவல்துறை திமுகவின் தொண்டர் படையாக மாறிவிட்டது குறித்தும் ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ஆளும் திமுக அரசின் அச்சுறுத்தல், அழுத்தம் காரணமாக ஐஎப்எஸ்அதிகாரி முதல் உதவி ஆய்வாளர்கள் வரை தற்கொலைக்கு தூண்டப்படுகின்றனர். சட்டம் ஒழுங்கு முழுமையாக சீரழிந்துவிட்டது. காவல் துறை அழிந்துவிட்டது.

எதிர்க்கட்சிகள் திமுக அரசின் குறைகளை சுட்டிக்காட்டினால், வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதைக் கண்டு நாங்கள் அஞ்சப்போவதில்லை. நீதிமன்றத்தில் வழக்குகளை நேர்மையாக சந்திப்போம். தற்போது, வழக்கு என்ற போர்வையில் தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை, அதாவதுமினி எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று ராஜேந்திர பாலாஜி,நாளை நாங்கள், எதிர்காலத்தில் அனைவருக்கும் இந்த நிலை வரலாம்.

திமுக அமைச்சரவையில் 23 அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. ராஜேந்திரபாலாஜி மீதானஅதே வழக்குதான் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதும் உள்ளது. செந்தில் பாலாஜியை கைது செய்ய முடியுமா.

ஜோலார்பேட்டையில் அதிமுகவை சேர்ந்த இருவர் மற்றும் முன்னாள் அமைச்சர் அன்பழகன் உதவியாளர் என 3 பேர் விருதுநகர் காவல் துறையினரால் கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் 4 நாட்களாக எங்கு இருக்கின்றனர் என்பது தெரியவில்லை. அவர்களுக்கு ஏதேனும் நிகழ்ந்தால், விருதுநகர் மாவட்ட கண்காணிப்பாளர் மனோகரன்தான் பொறுப்பு.

எங்கு பார்த்தாலும் போதை மருந்து, போதை விற்பனை நடைபெறுவதாக டிஜிபியே ஒப்புக்கொண்டுள்ளார். ஆளுங்கட்சினர் ஆதரவுடன் சூதாட்ட கிளப், கள்ள லாட்டரி நடத்தப்படுகிறது.

கொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பெண் குழந்தைகள் பாலியல் வழக்கு, பாலியல்கொலைகள் அதிக அளவில் நடைபெறுகின்றன. அரசு ஊழியர்களாக இருந்த வெங்கடாசலம், ராதாபுரம் உதவி பொறியாளர் தற்கொலை வழக்குகளை சிபிஐக்கு மாற்றவேண்டும்.

கடந்த 7 மாதங்களில் அதிக அளவில் சொத்துக் குவிப்பு, வசூல்வேட்டை என புகார் வருகிறது. நிர்வாகம் முதல்வர் ஸ்டாலின் கையில் உள்ளதா என சந்தேகம் எழுகிறது.

நீட் தேர்வு தொடர்பான மசோதா ஆளுநரிடம் உள்ளது. நீட் தேர்வு என்பது உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டது. அதை மாற்ற வேண்டுமானால் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும். இல்லாவிட்டால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மாற்ற வேண்டும். இதை விடுத்து, மசோதாநிறைவேற்றி அனுப்புவது மக்களை ஏமாற்றுவதாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x