Published : 01 Jan 2022 08:02 AM
Last Updated : 01 Jan 2022 08:02 AM

திருக்குவளை தியாகராஜர் கோயிலுக்கு சொந்தமானதா? தஞ்சாவூரில் ரூ.500 கோடி மரகத லிங்கம் மீட்பு: வங்கி லாக்கரில் வைத்திருந்த தந்தை, மகனிடம் விசாரணை

தஞ்சாவூரில் சிலை கடத்தல் தடுப்பு போலீஸாரால் மீட்கப்பட்ட ரூ.500 கோடி மரகத லிங்கம்.

சென்னை

தஞ்சாவூரில் ரூ.500 கோடி மதிப்புள்ள பச்சை மரகத லிங்கம் மீட்கப்பட்டுள்ளது. இந்த மரகத லிங்கம் திருக்குவளையில் உள்ளதியாகராஜர் கோயிலுக்கு சொந்தமானதா என விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, காவல் கண்காணிப்பாளர் பொன்னி ஆகியோர், சென்னை அசோக் நகரில் உள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவுதலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தஞ்சாவூர் அருளானந்த நகர் 7-வது குறுக்குத் தெருவில் உள்ள வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிவன் சிலை பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக ரகசியதகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்று, அங்கிருந்த என்.எஸ்.அருண பாஸ்கர் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர், தனது தந்தைசாமியப்பன் வசம், தொன்மையான பச்சை மரகத லிங்கம் ஒன்று இருப்பதாகவும், அதை தற்போது வங்கி லாக்கரில் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அந்த சிலை அவரது தந்தையிடம் எப்படி வந்தது என்று கேட்டபோது, அதுதொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்தார்.

இதையடுத்து, அந்த தொன்மையான பச்சை மரகத லிங்கத்தை, வங்கி லாக்கரில் இருந்து எடுத்து வந்து எங்களிடம் ஒப்படைத்தார். அதை, அங்கீகாரம் பெற்ற மரகதக்கல் மதிப்பீட்டாளர்களிடம் காண்பித்தபோது அதன் மதிப்பு ரூ.500 கோடிக்கு மேல் இருக்கும் என தெரிவித்தனர்.

2016-ல் மாயமான லிங்கமா?

இதற்கிடையே, கடந்த 2016 அக்.9-ம் தேதி நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தியாகராஜர் கோயிலில் இருந்து மரகதலிங்கம் கொள்ளை போனது தொடர்பாக தருமபுர ஆதீன மடத்தின் கண்காணிப்பாளர் சவுரிராஜன் திருக்குவளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கில் துப்பு துலங்காத நிலையில், தற்போது மீீட்கப்பட்டுள்ள மரகத லிங்கச் சிலை, கொள்ளை போன சிலையா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த சிலையை வைத்திருந்த சாமியப்பன் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். அவர் குணம்அடைந்தவுடன் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்புவோம். விசாரணை முடிந்த பிறகு, குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

சாமியப்பனிடம் சிலை எப்படி வந்தது, சர்வதேச சிலை கடத்தல் கும்பலுடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்றும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது, சோழ மன்னர்கள் கம்போடியா போருக்கு சென்று வெற்றிபெற்று, அங்கிருந்து கொண்டு வந்த சிலையாக இருக்கலாம் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

மரகத லிங்கத்தை மீட்ட தனிப்படை போலீஸாரை டிஜிபி சைலேந்திரபாபு, கூடுதல் டிஜிபி ஜெயந்த்முரளி ஆகியோர் பாராட்டி வெகுமதி அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x