முதுநிலை பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு கட்டணத்துக்கு ஜிஎஸ்டி விதிப்பு: மாணவர்கள் கடும் அதிருப்தி

முதுநிலை பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு கட்டணத்துக்கு ஜிஎஸ்டி விதிப்பு: மாணவர்கள் கடும் அதிருப்தி
Updated on
1 min read

முதுநிலை பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு கட்டணத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதித்துள்ளதால் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான் போன்ற முதுநிலை படிப்புகளில் 10,610 இடங்கள் வரை உள்ளன. இந்த படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஆண்டுதோறும் அண்ணா பல்கலை. நடத்தி வருகிறது. இதில் பங்கேற்க கேட் அல்லது டான்செட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும்.

அதன்படி, நடப்பு ஆண்டு கலந்தாய்வுக்கான விண்ணப்ப பதிவு இணையவழியில் கடந்தஆக.22 முதல் அக்.11-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 3,085 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியல் நவம்பரில் வெளியானது.

இதற்கிடையே, வன்னியர் சமூகத்துக்கான 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழக்கு காரணமாக கலந்தாய்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து கலந்தாய்வுக்கான அட்டவணையை அண்ணா பல்கலை. தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, சேர்க்கை கலந்தாய்வு ஜன.3 முதல் பிப்.1-ம் தேதி வரை இணையவழியில் நடக்கிறது.

இதில் பங்கேற்க விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவு மாணவர்கள் ரூ.300, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.150 செலுத்த வேண்டும். அதனுடன் 18 சதவீத ஜிஎஸ்டி கட்டணமும் சேர்த்து செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதவிர கலந்தாய்வு வைப்புத் தொகையாக பொதுப் பிரிவினர் ரூ.5,000, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.1,000செலுத்த வேண்டும். இந்த கட்டணம், கல்லூரிகளில் சேர்க்கையின்போது கழித்துக் கொள்ளப்படும்.

மொத்தம் 10,610 இடங்கள் உள்ள நிலையில், 3,085 பேர்மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர். இதனால் கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்னரே 7,525 இடங்கள் காலியாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in