

கரோனா பெருந்தொற்றில் இருந்துமீண்டு வரும் நிலையில், ஜவுளித் துறைக்கான ஜிஎஸ்டியை 5 சதவீதமாகவே வைத்திருக்க வேண்டும் என ஜிஎஸ்டி கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தினார்.
ஜவுளித் துறைக்கான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி)5-ல் இருந்து 12 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக விவாதிக்க, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தஇக்கூட்டத்தில், தமிழகம் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
நேரடி வரி மற்றும் மறைமுக வரி வசூலிப்பதற்கு மாநிலத்துக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு என்பது நியாயமற்றதாக உள்ளது.
மாநிலத்தின் நேரடி வரிவிதிப்புக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பிறகு, மறைமுக வரிவிதிப்புக்கான அதிகாரமும் பெரும் பகுதி குறைக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி அறிமுகமாவதற்கு முன்னர் மதிப்பு கூட்டு வரி தமிழகத்தில் இருந்தபோது, ஜவுளித் துறைக்கு முழுமையாக வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஆயத்த ஆடைகளுக்கு மட்டும் 5 சதவீத வரி விதிக்கப்பட்டது.
தற்போது, கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து ஜவுளித் துறை மீண்டு சகஜ நிலைக்கு வரும் சூழலில், இந்த ஜிஎஸ்டி உயர்வு பரிந்துரை பொருத்தமற்றதாக உள்ளது.
ஜிஎஸ்டி உயர்த்தப்பட்டால், அரசால் மானியம் வழங்க இயலாது. மேலும், கூடுதல் கடன்கள் மற்றும்செயல்பாட்டு மூலதனம் கிடைக்காத நிலையில், ஜிஎஸ்டி உயர்வு வேலையிழப்பை அதிக அளவில் ஏற்படுத்தும் என்று ஜவுளித் துறை சங்கங்கள் தெரிவித்துள்ளன. எனவே, ஜவுளித் தொழிலுக்கான ஜிஎஸ்டி உயர்வை திரும்ப பெற வேண்டும்.
அதற்குப் பதில், ரூ.3 ஆயிரம் அல்லது ரூ.5 ஆயிரம் மதிப்புக்கு மேல் உள்ள ஆயத்த ஆடைகளுக்கு 12 சதவீதமும், அதற்கு குறைவான ஆடைகளுக்கு ரூ.5 சதவீதமும் வரி விதிக்கலாம்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.