Published : 01 Jan 2022 08:25 AM
Last Updated : 01 Jan 2022 08:25 AM

பெட்ரோல் விலையை குறைப்பதாக பாஜக தேர்தல் அறிக்கையில் கூறவில்லை: மாநிலத் தலைவர் அண்ணாமலை தகவல்

பாஜக மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் நடைபெறஉள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை.

மழைவெள்ள பாதிப்பு குறித்து மத்தியக் குழு பார்வையிட்டுச் சென்ற நிலையில், மழை பாதிப்புநிவாரணத்தொகை இதுவரைதமிழகத்துக்கு வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர். பேரிடர் மேலாண்மை நிதி, பேரிடர் காலத்துக்கு முன்னரே மத்திய அரசு நிதி ஒதுக்கும். அந்த விஷயத்தை மாநில அரசுகள் கூறுவதில்லை.

பேரிடருக்குப் பிறகு மத்தியக் குழு ஆய்வு செய்து மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை அளித்துள்ளது. அதனடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும். மேலும், தற்போது ஆளும் திமுக அரசானது பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் குறித்து முறையாக பதிவு செய்திருந்தால் கண்டிப்பாக மத்திய அரசிடம் இருந்து நிதி வரப் பெற்றிருக்கும்.

நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழகத்துக்கு வலுசேர்க்கும் வகையில் திட்டங்கள் உருவாகும். ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு சிறப்பாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் தமிழகத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தமிழகம் ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை. கடந்த 7 ஆண்டுகளில் மத்திய பட்ஜெட்டில் ரூ.7.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை மேம்பாட்டு பணிகளுக்காக மட்டும் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.

பெட்ரோல் விலையில், மாநில அரசு வரிகளைக் குறைத்து, விலையைக் குறைக்க பாஜக போராட்டம் நடத்தி வருகிறது. பாஜகவின் சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் எனக் கூறவில்லை. ஆனால், திமுக தேர்தல் அறிக்கையில், பெட்ரோல் ரூ.5-ம், டீசல் விலையில் ரூ.4-ம் குறைப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதுவரையில் ரூ.3 மட்டுமே குறைத்துள்ளனர். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல திமுக அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x