காணாமல்போன குழந்தைகளை கண்டுபிடிக்க வேண்டும்: காவல் ஆணையரிடம் நடிகர் பார்த்திபன் மனு

காணாமல்போன குழந்தைகளை கண்டுபிடிக்க வேண்டும்: காவல் ஆணையரிடம் நடிகர் பார்த்திபன் மனு
Updated on
1 min read

காணாமல்போன குழந்தை களை கண்டுபிடிக்க வேண்டும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் நடிகர் பார்த்திபன் மனு கொடுத்துள்ளார்.

சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று மாலை 3.30 மணியளவில் நடிகர் பார்த்திபன் திடீரென வந்தார். காவல் ஆணையாளர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து, சென்னையில் காணாமல்போன குழந்தைகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறி ஒரு மனு கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னை நகரின் பிளாட்பாரங்களில் தூங்கிக்கொண்டிருந்த விமல் என்ற 8 மாத குழந்தையையும், சரண்யா என்ற 9 மாத குழந்தையையும் சில நாட்களுக்கு முன்பு கடத்திச் சென்றுவிட்டனர். இப்படி கடத்தப்படும் மற்றும் காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்க லதா ரஜினி காந்தின் தயா பவுண்டேஷன், எம்.பி.நிர்மலின் எக்ஸ்னோரா அமைப்பு, எனது பார்த்திபன் மனிதநேய மன்றம் ஆகிய மூன்றும் இணைந்து 'அபயம்' என்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறோம்.

தமிழகத்தில் தினமும் 5 குழந்தைகள் காணாமல் போகின்றனர். கடந்த 22-ம் தேதி ஒரே நாளில் மட்டும் 21 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். 2014-ம் ஆண்டில் 441 குழந்தைகளும், 2015-ல் 656 குழந்தைகளும், இந்த ஆண்டில் இதுவரை 450 குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர். இதில் மூன்றில் ஒரு குழந்தை மட்டுமே மீட்கப்படுகிறது.

சென்னையில் 2014-ல் 114 குழந்தைகளும், 2015-ல் 149 குழந்தைகளும், இந்த ஆண்டில் இதுவரை 58 குழந்தைகளும் காணாமல் போயுள்ளனர் என்று மாநில குற்ற ஆவணக் காப்பகம் மற்றும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

இப்படி காணாமல் போகும் குழந்தைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையைதான் காவல் ஆணையரிடம் வைத்திருக்கிறேன். அவர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக கூறியிருக்கிறார். எங்களை விழிப்புணர்வு பிரசாரம் செய்யவும் கூறியிருக்கிறார். அரசு சார்பில் அம்மா குழந்தைகள் காப்பகம் தொடங்குவது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன். விரைவில் தொண்டு நிறுவன நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்.

காணாமல் போகும் மற்றும் கடத்தப்படும் குழந்தைகளை பலர் பிச்சை எடுக்கவும், தவறான நிகழ்வுகளுக்கும் பயன்படுத்துகின்றனர். சென்னையில் குழந்தையுடன் பிச்சையெடுக்கும் நபர்களைப் பிடித்து விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு நடிகர் பார்த்திபன் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in