

அடுத்த மழைக்காலத்துக்குள், சென்னை மாநகராட்சியில் உள்ள பில்லர் பெட்டிகள் ஒரு மீட்டர் உயர்த்தப்படும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
சென்னையில் நேற்று முன்தினம் கனமழை பெய்தபோது, மின் தடைபுகார்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து,மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்படும் மின்னகம் என்ற நுகர்வோர் சேவை மையத்தில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் திடீரென பெய்த கனமழை காரணமாக, பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்ததால், 32 பீடர்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. மின்வாரியம், சென்னை மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொண்ட போர்க்கால நடவடிக்கைகளால், 23 பீடர்களில் மின்விநியோகம் வழங்கப்பட்டது.
மின்விநியோகம் தொடர்பாக வரும் புகார்கள் மீது விரைவாகநடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் சீரான மின்விநியோகம் வழங்குவதற்காக 1,000 களப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மின்விபத்தால் 3 பேர் உயிர்இழந்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு வரப்படுகிறது. ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள பில்லர் பெட்டிகளை உயர்த்தும் பணி மேற்கொள்ளப்பட்டுஉள்ளது.
அடுத்த மழைக் காலத்துக்கு முன்பாக, சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து பில்லர் பெட்டிகளும் ஒரு மீட்டர் உயர்த்தப்படும். இதனால், மழைநீர் சூழ்ந்தாலும் சீரான மின்விநியோகம் வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.