

கரோனா பெருந்தொற்று தீவிரமான காலகட்டங்களில் சித்த மருத்துவம் உள்ளிட்ட ஆயுஷ் மருத்துவத் துறைகள் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளதாக தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனை இயக்குநர் மீனாகுமாரி தெரிவித்தார்.
சென்னை தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனம், மீனம்பாக்கம் அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி சார்பில் 5-வது சித்தர் திருநாள் கொண்டாடப்பட்டது.
இலவச மூலிகை கன்றுகள்
இதன் ஒரு பகுதியாக, கல்லூரி வளாகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பெட்டகம், இலவச மூலிகை கன்றுகள் வழங்கும் விழா, இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது.
மருத்துவமனை இயக்குநர் ஆர்.மீனாகுமாரி தலைமையில் நடந்த முகாமில் மருத்துவமனை முதல்வர் வெங்கடரமணன், பேராசிரியர்கள் மீனாட்சி சுந்தரம், அரவிந்த், இணை பேராசிரியர்கள் செந்தில்வேலு காந்தாள், சித்ரா மற்றும் கல்லூரியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். முகாமில் 1,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு மூலிகை கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
மருத்துவமனை இயக்குநர் மீனாகுமாரி பேசும்போது, “கரோனா பெருந்தொற்று தீவிரமான காலகட்டங்களில் சித்தமருத்துவம் உள்ளிட்ட ஆயுஷ்மருத்துவத் துறைகள் சிறப்பானபங்களிப்பை வழங்கியுள்ளன. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உயிரிழப்புகள் குறைந்தன
உயிரிழப்புகளும் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டன. மக்கள் அனைவரும் சித்த மருத்துவத்தின் சிறப்பை உணர்ந்து, தங்களது உடல்நல மேம்பாடு, ஆரோக்கிய வாழ்வுக்கு அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.