

மாமல்லபுரம் மற்றும் ஓஎம்ஆர், ஈசிஆர் சாலைகளில் போலீஸாரின் கடும் வாகன சோதனைகளுக்கு பிறகே நகருக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், புத்தாண்டு தினத்தன்றும் கடற்கரைக்குச் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையோரங்களில் உள்ள சொகுசு விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும், எஸ்பி.அரவிந்தன் தலைமையில், மாமல்லபுரம் டிஎஸ்பி.ஜகதீஸ்வரன், 8 ஆய்வாளர்கள், 200 போலீஸார் முட்டுக்காடு, நாவலூர், திருப்போரூர், மாமல்லபுரம் நகர எல்லை உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில், பண்ணை வீடுகள் மற்றும் சொகுசு விடுதிகளுக்கு முன்கூட்டியே ஆன்லைனில் பதிவு செய்த நபர்களை மட்டுமே நகருக்குள் செல்ல போலீஸார் அனுமதித்தனர்.
மேலும், மாமல்லபுரம் நகர எல்லையில் சாலையில் தடுப்புகள் அமைத்து வெளிநபர்கள் உள்ளே செல்லாத வகையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். அத்தியாவசிய தேவைக்காகச் சென்ற உள்ளூர் மக்களை மட்டும் விசாரித்து அனுமதித்தனர்.
மேலும், முட்டுக்காடு பகுதியில் பிற்பகல் முதலே சென்னையில் இருந்து மோட்டார் சைக்களில் ஈசிஆர் சாலையில் வந்த இளைஞர்களை போலீஸார் எச்சரித்து திருப்பி அனுப்பினர். மேலும், திருப்போரூர் பகுதியில் உள்ள ஓஎம்ஆர் சாலையிலும் போலீஸார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.\
கேக் வெட்டி கொண்டாட்டம்
இதனால், கோவளம் முதல் மாமல்லபுரம் வரையிலான கடற்கரை பகுதிகளில் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. சொகுசு விடுதிகளில் தங்கியிருந்த நபர்கள் விடுதிகளுக்குள் கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
இந்நிலையில், புத்தாண்டு நாளான இன்றும் மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
கரோனா தொற்று அச்சத்தால் தமிழக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை மட்டுமே அமல்படுத்தியுள்ளோம்.
புத்தாண்டு நாளில் மாமல்லபுரத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடுவர் என்பதால், புத்தாண்டு தினத்தன்றும் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
விடுதிகளில் தங்கியுள்ள நபர்களும் கடற்கரைக்குச் செல்லக் கூடாது என விடுதி நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். தடையை மீறும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா தொற்றை தடுப்பதற்காக போலீஸாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்றனர்.