Published : 01 Jan 2022 07:30 AM
Last Updated : 01 Jan 2022 07:30 AM

கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் சென்னை குடிநீர் ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்

கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால் சென்னைக்கு குடிநீர் தரும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் மற்றும் சோழவரம் ஏரிகளிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் மதியம் முதல் கனமழை பெய்து வருகிறது. விட்டு விட்டு பெய்து வரும் இம்மழையின் காரணமாகச் சென்னைக்கு குடிநீர் தரும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு நேற்று முன்தினம் மதியத்துக்குப் பிறகு அதிகரித்து வருகிறது.

இதனால், நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு, 35 அடி உயரம் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு 3,118 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்டம் 34.91 அடியாகவும் உள்ளது.

3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு, 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு, 3,267 மில்லியன் கன அடியாகவும் நீர்மட்டம் 21.08 அடியாகவும் இருக்கிறது. 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு, 24 அடி உயரம் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 3,540 மில்லியன் கன அடியாகவும் நீர்மட்டம் 23.60 அடியாகவும் உள்ளது.

1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு, 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 884 மில்லியன் கன அடியாகவும் நீர்மட்டம் 17.88 அடியாகவும் இருக்கிறது. 500 மில்லியன் கன அடி கொள்ளளவு, 36.61 அடி உயரம் உள்ள கண்ணன் கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியின் நீர் இருப்பு 500 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்டம் 36.61 அடியாகவும் உள்ளது.

ஆகவே, இந்த ஏரிகளிலிருந்து, நேற்று முன்தினம் இரவு முதல் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 1,107 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், விநாடிக்கு 744 கன அடி உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. புழல் ஏரிக்கு விநாடிக்கு 1,495 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், விநாடிக்கு 1,500 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 1,250 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், விநாடிக்கு 1000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரிக்கு விநாடிக்கு 895 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், விநாடிக்கு 880 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதே போல், கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிக்கு விநாடிக்கு 102 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், விநாடிக்கு 102 கன அடி உபரிநீர் வெளியேறி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x