

தமிழகத்தில் மழைக்குப் பின்னர் டெங்கு மற்றும் தண்ணீர் மூலம் பரவும் தொற்று நோய்களைத் தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும், பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பருவமழைக்கு முன்பும், மழை பெய்யும்போதும், மழைக்குப் பின்னரும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஏற்கெனவே சுகாதாரத் துறை, அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
மேலும், கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து முதல்வர் மற்றும் தலைமைச் செயலர் தலைமையில் தனித்தனியே ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மழை வடிந்த இடங்களில் பிளீச்சிங் பவுடர் மற்றும் கிருமிநாசினி தெளிப்பது, மருத்துவ முகாம்கள் நடத்துவது, மக்களுக்கு விநியோகிக்கப்படும் தண்ணீரில் உரிய அளவு குளோரின் கலந்து, பாதுகாப்பான நீரை வழங்குவதை உறுதிசெய்வது போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும்.
தண்ணீரில் ஏற்படும் மாசுபாட்டால் வயிற்றுப்போக்கு, கணைய அழற்சி, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பான குடிநீர் விநியோகிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். இந்தப் பணியை முறையாக கண்காணிக்க, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், கொசுக்கள் மூலம் பரவும் சிக்குன் குனியா, டெங்கு, மலேரியா போன்ற பாதிப்புகளும் மழைக்குப் பிறகு ஏற்பட வாய்ப்புள்ளது. மழைக் காலங்களில் நுரையீரல் சார்ந்த நோய்களும், சேற்றுப் புண்களும் ஏற்படக்கூடும். தரமற்ற உணவுகளால் உடல் உபாதைகள் வருவதற்கும் வாய்ப்புண்டு. எனவே, அவற்றைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் விரிவாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.