

சென்னையில் நேற்று 2-வது நாளாக மழை நீடித்த நிலையில், சில பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். 178 இடங்களில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று முன்தினம் திடீரென கனமழை பெய்தது. இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, சென்ட்ரல் ரயில் நிலையம் முன்புறமுள்ள சந்திப்பு, அண்ணா சாலை-வாலாஜா சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கனமழையால் 187 இடங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியது. 27 மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவற்றை தீயணைப்பு வீரர்கள், போலீஸார், மாநகராட்சிப் பணியாளர்கள் இணைந்து அகற்றி, போக்குவரத்தை சீரமைத்தனர். 170-க்கும் மேற்பட்ட ராட்சத நீர் இறைக்கும் இயந்திரங்களைக் கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது.
இதற்கிடையே நேற்றும் சென்னையில் மழை நீடித்தது. ஆழ்வார்பேட்டை சீத்தாம்மாள் சாலை, மயிலாப்பூர் பி.எஸ்.சிவசாமி சாலை, தியாகராய நகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, டிக்காஸ்டர் சாலை, பட்டாளம் சந்தைப் பகுதி, கொளத்தூர் பெரவள்ளூர் பகுதி, அசோக் நகர் 18-வது அவென்யூ சாலை, கே.கே. நகர் பிரதான சாலை மற்றும் மேற்கு மாம்பலத்தில் பல்வேறு சாலைகளில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.
பல பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால், அத்தியாவசியத் தேவைகளுக்குகூட வெளியில் வரமுடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பல இடங்களில் தண்ணீருடன், கழிவுநீரும் கலந்திருப்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. ரங்கராஜபுரம், மேட்லி சுரங்கப் பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.