

புதுச்சேரியின் முக்கியமான தொழில்களில் நெசவும் ஒன்று. கைத்தறி தொழிலாளர்களை ஊக்குவிக்கவும் கைத்தறி உற்பத்தியை பிரபலப்படுத்தவும் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கைத்தறி ஏற்றுமதி நிறுவனம் நாடு முழுவதும் 5 இடங்களில் தொடங்கப்பட்டது. புதுச்சேரியில் பாண்பேப் பெயரில் 50 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த அரசு சார்பு நிறுவனம் உற்பத்தி செய்த துண்டு, படுக்கை விரிப்பு, தலையணை உறை, கைலி, புடவை போன்றவை இந்தோனேஷியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உட்பட தமிழர்கள் வாழும் பல நாடுகளுக்கு ஏற்றுமதிசெய்யப்பட்டது. மிகவும் பிரபலமான பாண்பேப்துணி வகைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தொடர்ந்து லாபகரமாக இயங்கி வந்த நிறுவனம் தற்போது நலிவடைந்து உள்ளது. அதிகாரிகளின் தவறான நிர்வாகத்தின் காரணமாக பாண்பேப் மூடும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.
நெசவாளர்கள் தரப்பில் கூறுகையில், "தானேபுயலின் போது பாண்பேப் கைத்தறி கொட்டகைகள் உடைந்து விழுந்த போது அதனை அரசுசீர் செய்யவில்லை. இதனால் இரண்டாயிரத் துக்கும் மேற்பட்ட கைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வந்த நிறுவனத்தில் தற்போது 170 க்கும் குறைவானவர்களே பணியாற்றுகின்றனர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி முழுவதும் கைத்தறி தொழிலை தான் மக்கள் நம்பியுள்ளனர். மூன்று தலைமுறையாக இங்கு கைத்தறி தொழிலில் ஈடுபடும் நெசவா ளர்கள் தற்போது வேலை இழந்து வேறு வேலைகளுக்கு மாறிவிட்டனர்.
அரசு சார்பில் பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைக்கு இங்கிருந்து உருவாக்கி தரப்படும் துணிகள் துறை சார்பில் வாங்கப்பட்டு, இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் அலட்சியத்துடன் கடந்த சில ஆண்டுகளில் தனியார் தரப்பில் துணிகளை வாங்கி விற்றதால் தொழிலாளர்கள் வேலை இழந்ததுடன் பெருமளவிலான நஷ்டத்தை சந் திக்க நேர்ந்தது. இதனால் தற்போது மூடுவிழா காணும் நிலைக்கு வந்துள்ளது." என்றனர்.
இதற்கிடையே பாண்பேப் இடத்தை விற்க முயற்சி நடக்கத் தொடங்கியது. இதற்கான ஏலம் அறிவிப்புக்கு தொழிலாளர்கள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் 3 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாண்பேப் நிறுவனத்தை புதுப்பித்து நவீனப்படுத்தி அரசு செயல்படுத்த வேண்டும். மக்களுக்கான இலவச துணிகள் பாண்பேப் மூலம் வழங்க வேண்டும் நிலத்தை விற்பதற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகின்றன
இதுதொடர்பாக சிபிஎம் பிரதேச செயலர் ராஜாங்கம் கூறுகையில், "கைத்தறி துணிகளுக்குவரவேற்பு தற்போதும் உள்ளது. தமிழக அரசா னது, ‘மாணவர்கள், அலுவலகம் செல்வோர் ஆகியோர் இரண்டு நாட்களுக்கு கைத்தறி துணிகளை அணிந்தால் நெசவாளர்களின் வாழ்வுக்கு வழிவகுக்கும்’ என்று பிரச்சாரம் செய்கின்றனர். புதுச்சேரியிலும் இம்முயற்சி அவசியம். பழமையான இத்தொழிலை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்குண்டு. பாண்பேப்பை பாதுகாக்க நிதியை ஒதுக்கி நெசவாளர்களுக்கு வேலை தர வேண்டும். தொழிலை பாதுகாப்பதுடன் பணிவாய்ப்பும் கிடைத்தால், அந்நிய செலாவணியை ஈட்டலாம்" என்று தெரிவித்தார்.