போக்ஸோ வழக்குகளில் சமாதானம் செய்வதற்காக கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

போக்ஸோ வழக்குகளில் சமாதானம் செய்வதற்காக கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை
Updated on
1 min read

போக்ஸோ வழக்குகளில் சமாதானம் செய்து வைப்பதற்காக கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று தெரிவித்துள்ளதாவது: மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்ட போக்ஸோ வழக்குகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கடந்த 2019-ம் ஆண்டில் 52 வழக்குகளிலும், 2020-ம் ஆண்டில் 53 வழக்குகளிலும், 2021-ம் ஆண்டில் 8 வழக்குகளிலும் பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் பெற்றோர்கள் சமாதானமாக சென்றுவிடுவதாக தெரிவித்ததால், அவ்வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

ஒருசில போக்ஸோ வழக்குகளில் கிராம முக்கியஸ்தர்கள், ஊர்க்காரர்கள், உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இணைந்து குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில் பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் பெற்றோரை சமாதானம் செய்து வைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையில், கட்டப் பஞ்சாயத்து செய்ததன் மூலம் எந்த வழக்காவது விடுதலையில் முடிந்ததாக தெரியவந்தால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குழந்தைகளுடைய பாதுகாவலர்களோ அல்லது பெற்றோர்களோ கட்டப் பஞ்சாயத்து மூலம் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு நடந்து கொண்டது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குழந்தைகளின் பாதுகாவலர்களாக விளங்குவது பெற்றோர்கள் மட்டுமல்ல, அரசும்தான் என்பதை உணர்த்தும் வகையில் மத்திய மண்டலத்துக்குட்பட்ட 9 மாவட்டங்களிலும் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலையான போக்ஸோ வழக்குகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in