Published : 01 Jan 2022 09:00 AM
Last Updated : 01 Jan 2022 09:00 AM

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் மற்றும் தி.மலை அண்ணாமலையார் கோயில்களில் மருத்துவ உதவி மையங்கள் திறப்பு: காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மருத்துவ மையம் திறப்பு விழாவில் பேசும் ஆட்சியர் பா.முருகேஷ். அருகில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி உள்ளிட்டோர்.

சோளிங்கர்/திருவண்ணாமலை

சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயில் மற்றும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மருத்துவ உதவி மையங்களை காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. மலையின் மீது அமைந்துள்ள சுவாமியை தரிசனம் செய்ய உள்ளூரில் மட்டுமில்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மேலும், தமிழகத்தில் பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் கோயில்களில் மருத்துவ உதவி மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்டது. இதில், சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலும் இடம் பெற்றது.

இந்நிலையில், சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் 10 கோயில்களில் மருத்துவ உதவி மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

சோளிங்கரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மலையில் உள்ள கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இந்த மருத்துவ உதவி மையம் செயல்படும். இதற்காக, 2 மருத்துவர்கள், 2 செவிலியர்கள், 2 பல்நோக்கு மருத்துவ பணி யாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒரு குழு பெரிய மலை மீது அமைந்துள்ள கோயில் வளாகத்தில் இருக்கும் மருத்துவ மையத்தில்பணியாற்றுவார்கள். மற்றொரு குழு சிறிய மலையடிவாரத்தில் உள்ள முகாமில் செயல்படுவார்கள்.

இந்த மருத்துவ மையம் தினசரி காலை 8.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை செயல்படும். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து மருத்துவ மையத்தில் பணியாற்ற உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கியதுடன் மருத்துவ மையம் செயல்படுவதையும் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சி யில், சோளிங்கர் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன், உதவி ஆணையர் ஜெயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயில் மருத்துவ மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. காணொலி காட்சி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இதையடுத்து, தி. மலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள மருத்துவ மையத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி பார்வையிட்டார்.

அப்போது ஆட்சியர் பா.முருகேஷ் பேசும்போது, பக்தர்கள் அதிகளவில் வருகை தரும் அண்ணாமலையார் கோயிலுக்கு மருத்துவ மையத்தை அமைத்து கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத் துறைக்கு நன்றி தெரிவித்து கொண்டார். கோயில் இணை ஆணையர் அசோக்குமார், உதவி காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி, கோட்டாட்சியர் வெற்றிவேல், அண்ணாதுரை எம்பி, கிரி எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மருத்துவ மையத்தில் 2 மருத்துவர்கள், 2 செவிலியர்கள், 2 பல்நோக்கு மருத்துவ பணியா ளர்கள் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள். சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் முதலுதவி மற்றும் அடிப்படை சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்கள், படுக்கை வசதிகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x