Last Updated : 31 Dec, 2021 09:04 PM

 

Published : 31 Dec 2021 09:04 PM
Last Updated : 31 Dec 2021 09:04 PM

புத்தாண்டு கொண்டாட்டம்; புதுச்சேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

புதுச்சேரி: புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக புதுச்சேரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கரோனா, ஒமைக்ரான் காரணமாக புத்தாண்டு கெண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் அரசு அனுமதி வழங்கியது. இதனால் புதுச்சேரியில் 2022 புத்தாண்டு கொண்டாட்டம் களைக்கட்டி வருகிறது.

ஓட்டல்கள், விடுதிகளில் அறைகள் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டு நிரம்பின. பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நகரின் முக்கிய சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

புதுச்சேரி மாநில எல்லைகளான கோரிமேடு, முள்ளோடை, மதகடிப்பட்டு, கனகசெட்டிகுளம் ஆகிய எல்லைகளுக்குள் நுழையும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த அனைத்து வாகனங்களையும் காவல்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்டவற்றின் சார்பில் அமைக்கப்பட்ட குழுக்கள் நிறுத்தி தடுப்பூசி சோதனைகளை மேற்கொள்கிறன.

அப்போது, ஓட்டுநர், சுற்றுலாப் பயணிகளின் சான்றிதழ்களை வாங்கி சரிபார்த்து, தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே புதுச்சேரிக்குள் அனுமதித்தனர். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மாநில எல்லைகளிலேயே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சில வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

மேலும், உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, அனைவரையும் முகக்கவசம் அணிய வலியுறுத்தப்பட்டது. இன்று பிற்பகலில் இருந்து நாளை காலை வரை கடற்கரை சாலையில் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நகரில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டன.

புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், புத்தாண்டு கொண்டாட அனுமதிக்கப்பட்ட கடற்கரை சாலையில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இன்று பிற்பகல் முதலே புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு வரத்தொடங்கினர். தொடர்ந்து கூட்டம் அதிகரித்துள்ளது.

அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்தே கடற்கரைக்கு வருகின்றனர். அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்பே அனுமதிக்கப்படுகின்றனர். கடற்கரை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

சட்டம் ஒழுங்கு போலீஸார், போக்குவரத்து போலீஸார், ஐஆர்பிஎன், ஊர்க்காவல் படையினர் என சுமார் 2000 போலீஸார், என்சிசி, என்எஸ்எஸ் மாணவர்களும் பாதுகாப்பு பாணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகளால் அமைக்கப்பட்ட குழுக்கள் புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே நின்று, முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.100 அபராதம் வசூலிக்கின்றனர். தொடர்ந்து முகக்கவசம் அணிந்து கொள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள் வருகையால் நகரப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மழையால் சுற்றுலா பயணிகள் அவதி:

புதுச்சேரியில் நேற்று லேசான மழை பெய்தது. இதனால் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தொடர்ந்து இன்று காலை லேசான மழை பெய்தது. பிற்பகலில் விட்ட மழை மாலையில் பெய்தது. இதனால் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் மழையில் நனைந்து அவதியடைந்தனர்.

அவர்கள் தங்கியிருந்த இடங்களுக்கு விரைந்தனர். புத்தாண்டு விழாவுக்காக விற்பனைக்கு பொருட்களுடன் திரண்டிருந்த தெருவோர வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர். மழையுடன் கடலும் சீற்றத்துடன் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதித்து, கடற்கரையில் இறங்கியோரை போலீஸார் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x