Published : 31 Dec 2021 08:13 PM
Last Updated : 31 Dec 2021 08:13 PM

8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் கிடையாது; திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி - தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்

சென்னை: நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. அன்றாட கரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதனால், தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் கிடையாது; திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, திருமணம், துக்க நிகழ்வுகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி என பல்வேறு கெடுபிடிகள் அமலுக்கு வருகின்றன.

தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஆணை எண்.882 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 15.12.2021-ன்படி, 31.12.2021 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், பண்டிகைக் காலங்களில், கரோனா நோய்த் தொற்று பரவலைத் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தற்போது தமிழ்நாட்டில் பரவி வரும் உருமாறிய கரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும் தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுபடுத்தவும் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 31.12.2021 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் எடுக்கப்பட்ட முடிவு:

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் 27.12.2021 நாளிட்ட அறிவிக்கையின்படி கரோனா நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகள் 31.1.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறிய கரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டும் மற்றும் பொது மக்கள் நலன் கருதியும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் 10.1.2022 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.

பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் கூடுவதால் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளதைக் கருத்தில் கொண்டு பொது மக்கள் நலன் கருதி கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

1) சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.

2) மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Play Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.

3) அனைத்து பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 10.1.2022 முடிய நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

4) அனைத்து பொருட்காட்சிகள் மற்றும் புத்தகக் கண்காட்சிகள் நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும் செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

1) 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள், கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படும்.

2) வழிபாட்டுத் தலங்களைப் பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடைபிடிக்கப்படும்.

3) உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.

4) பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் (Entertainment Park / Amusement Park) 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

5) திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.

6) இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.

7) துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

8) கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

9) உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

10) பொது போக்குவரத்து பேருந்துகளில் உள்ள இருக்கைகளுக்கு மிகாமல் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படும்.

11) மெட்ரோ இரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

12) திரையரங்கங்கள் உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும் (Multiplex/Cinemas/Theatres) அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

13) திறந்த வெளி விளையாட்டு மைதானங்களில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.

14) உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும்.

15) அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Salons and Spas) ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

இவ்வாறாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x