Published : 15 Mar 2016 08:45 AM
Last Updated : 15 Mar 2016 08:45 AM

மெகா தொடர்கள், திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் சாய் பிரசாந்த் விஷம் குடித்து தற்கொலை: உருக்கமான 2 கடிதங்கள் கிடைத்தன

பிரபல சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை வளசரவாக்கம் கங்கா நகர் 2-வது தெருவில் வசித்தவர் நடிகர் சாய் பிரசாந்த் (30). நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி ‘இளவரசி’, ‘அண்ணாமலை’, ‘அரசி’, ‘செல்வி’ உட்பட பல சின்னத்திரை மெகா தொடர்களிலும், ‘நேரம்’, ‘தெகிடி’, ‘வடகறி’, ‘ஐந்தாம்படை’ உட்பட பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர். டிவி, சினிமாவில் நடிப்பதற்காக சென்னை வளசரவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார்.

கருத்து வேறுபாடு

இவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையை சேர்ந்த நிரஞ்சனா (29) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. 3 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர்.

6 மாதங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த சுஜிதா (24) என்ற பெண்ணை சாய் பிரசாந்த் 2-வதாக திருமணம் செய்துகொண்டார். இருவரும் வளசரவாக்கம் வீட்டில் வசித்து வந்தனர். 2 வாரங்களுக்கு முன்பு இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. சுஜிதா கோபித்துக் கொண்டு, கோவையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதன் பிறகு, வருத்தத்தில் இருந்த சாய் பிரசாந்த், கடந்த வாரம் பெங்களூருவுக்கு சென்றார். வீட்டில் அப்பா, அம்மாவுடன் சில நாட்கள் தங்கியிருந்துவிட்டு, கடந்த 13-ம் தேதி சனிக்கிழமை சென்னை திரும்பினார்.

ஞாயிற்றுக்கிழமை முழுவதும் வீட்டை விட்டு அவர் வெளியே வரவில்லை. மனைவி சுஜிதாவுக்கு தொடர்ந்து போன் செய்துகொண்டே இருந்துள்ளார். அன்று இரவு பேசியபோது, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். அதன்பிறகு, சுஜிதா பலமுறை தொடர்பு கொண்டும் சாய் பிரசாந்த் போனை எடுக்கவில்லை.

பதறிப்போன சுஜிதா, வளசரவாக்கம் வீட்டின் உரிமையாளர் லோகநாதனை போனில் தொடர்பு கொண்டு, விவரத்தை கூறியுள்ளார். லோகநாதன் உடனே சென்று சாய் பிரசாந்த் வீட்டின் கதவை தட்டியுள்ளார். எந்த பதிலும் இல்லாததால், ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அப்போது, வாயில் நுரைதள்ளிய நிலையில் கட்டிலுக்கு கீழே சாய் பிரசாந்த் கிடந்துள்ளார்.

லோகநாதன் கொடுத்த தகவலின்பேரில், மதுரவாயல் போலீஸார் விரைந்து வந்தனர். கதவை உடைத்து சாய் பிரசாந்தை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

‘அரளி விதையை மிக்ஸியில் அரைத்து, அதை மதுவில் கலந்து சாய் பிரசாந்த் குடித்துள்ளார். வீட்டில் அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. பிரேதப் பரிசோதனை முடிவு வந்த பிறகே உறுதியான தகவல்களை கூற முடியும்’ என்று போலீஸார் தெரிவித்தனர்.

‘மனைவியை நேசிக்கிறேன்’

வீட்டில் போலீஸார் நடத்திய சோதனையில், சாய் பிரசாந்த் எழுதி வைத்திருந்த உருக்கமான 2 கடிதங்கள் கிடைத்தன. ‘நடிப்பதற்கு வாய்ப்பு தந்த ராதிகா மேடம் உட்பட அனைவருக்கும் நன்றி. மனைவி சுஜிதாவை மிகவும் நேசிக்கிறேன்’ என்று ஒரு கடிதத்தில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. மற்றொரு கடிதத்தில் பெற்றோர், மனைவி, குடும்ப உறுப்பினர்கள் குறித்து எழுதப்பட்டிருந்தது.

பிரேதப் பரிசோதனை முடிந்து உடலை யார் பெறுவது என்பதில் சாய் பிரசாந்தின் பெற்றோருக்கும், மனைவி சுஜிதாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. முடிவில் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் சிவன் சீனிவாசன் கூறியபோது, ‘‘கலைஞர்களின் மனம் மென்மையானது. அதனால்தான் பிரச்சினைகளை அவர்களால் தாங்கமுடிவதில்லை. பிரச்சினைகள் குறித்து அவர்கள் எங்களிடம் கூறினால், நிச்சயம் அவற்றை சரிசெய்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுப்போம்’’ என்றார்.

ராதிகா கூறும்போது, ‘‘ சின்னத்திரை நிறுவனத்திலோ, ஒரு தொலைக்காட்சி யிலோ நடிப்பதற்காக ஒப்பந்தம் போட்டால், வேறு நிறுவனங்களில் நடிக்கக்கூடாது என்று நிர்பந்திக்கின் றனர். அது தவறு. போதிய வருமான மின்றி கலைஞர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x