Published : 31 Dec 2021 05:21 PM
Last Updated : 31 Dec 2021 05:21 PM
திருப்பத்தூர்: விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கட்சி நிர்வாகிகளை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையிலான அதிமுகவினர் திருப்பத்தூர் எஸ்.பி. அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனம் மற்றும் அரசுத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் 3 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, அவரைக் கைது செய்ய காவல்துறையினர் முயன்றபோது, கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து டிசம்பர் 17-ம் தேதி முதல் அவர் தலைமறைவாக உள்ளார். அவரைக் கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், ராஜேந்திர பாலாஜியிடம் நெருக்கமாக உள்ள அதிமுகவினரின் செல்போன் எண்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டபோது, திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கோடியூரைச் சேர்ந்த அதிமுக இளைஞர் பாசறை நகரச் செயலாளர் ஏழுமலை மற்றும் திருப்பத்தூர் அடுத்த அக்ரகாரத்தைச் சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளர் விக்னேஸ்வரன் ஆகிய 2 பேரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் அடிக்கடி செல்போனில் பேசியது தெரியவந்தது.
இதனையடுத்து சிவகாசி டிஎஸ்பி பிரபாகர் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் கடந்த 28-ம் தேதி 2 பேரையும் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்நிலையில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற அதிமுக நிர்வாகிகள் இருவரும் எங்கே உள்ளனர்? அவர்களின் தற்போதைய நிலை என்ன ? கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தாருக்கு காவல்துறை சார்பில் எந்த ஒரு பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
தமிழக காவல்துறையினரின் இத்தகைய செயலைக் கண்டித்தும், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அதிமுக நிர்வாகிகள் இருவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தியும், திருப்பத்துார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் அதிமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனிடம் அதிமுக நிர்வாகிகள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், தனிப்படை காவல் துறையினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் இருவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்தில், வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார், முன்னாள் எம்எல்ஏ ரமேஷ் உள்பட அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!