Published : 31 Dec 2021 02:20 PM
Last Updated : 31 Dec 2021 02:20 PM

திருச்செந்தூர் உள்ளிட்ட 7 கோயில்களில் மருத்துவ மையங்கள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: திருச்செந்தூர், திருவண்ணாமலை, மேல்மலையனூர், சோளிங்கர், மருதமலை, திருத்தணி, பழனி ஆகிய இடங்களிலுள்ள திருக்கோயில்களில் அமைக்கப்பட்ட மருத்துவ மையங்களை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

"முதல்வர் ஸ்டாலின் இன்று (31.12.2021) தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில், மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில், சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் (மேம்படுத்தப்பட்ட மருத்துவ மையம்) ஆகிய 7 கோயில்களில் மருத்துவ மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் அதிகளவில் பக்தர்கள் வருகை புரியும் 10 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு அக்கோயில்களில், தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனுக்குடன் உயிர் காக்கும் மருத்துவ முதலுதவி அளித்திடும் வகையில் இரண்டு மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள், இரண்டு பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களை கொண்டு மருத்துவ மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 2021-22ம் ஆண்டு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில், பக்தர்கள் அதிகளவில் வருகை புரியும் 10 திருக்கோயில்களில் தேவையான மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்களுகளுடன் கூடிய மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கோயில் மருத்துவ மையங்களில் பணியாற்றிட தகுதியான மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு கோயில்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோயில், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில், சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் என 7 கோயில்களில் அமைக்கப்பட்ட மருத்துவ மையங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்த மருத்துவ மையங்களில் முதலுதவி மற்றும் அடிப்படை சிகிச்சை மேற்கொள்வதற்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ரத்த அழுத்த மாணி, படுக்கைகள், உயிர்காக்கும் மருந்துகள் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. இதனால் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் பேருதவியாக செயல்படும். இப்பணிக்காக ஓர் மருத்துவ மையத்திற்கு ஓராண்டிற்கு சுமார் ரூ.30 லட்சம், வீதம் 10 கோயில் மருத்துவ மையங்களுக்கு மொத்தம் ரூ.3 கோடி கோயில் நிதியிலிருந்து செலவு செய்யப்படும்.
இந்த நிகழ்ச்சியில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்தர மோகன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்."

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x