

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தலை நியாயமாக நடத்த 48 கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதனைத் தொடர்ந்து, தொகுதி தேர்தல் அலுவலர்கள், துணை தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு அலுவலர்கள் பங்கேற்ற, தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்த விளக்க கூட்டம், ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.
இதில் மாவட்ட தேர்தல் அலுவலர் பி.சந்திரமோகன் பங்கேற்று பேசியதாவது: சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. சென்னையில் தேர்தல் நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதற்காக தேர்தல் நன்னடத்தை விதிகள் கட்டாயம் பின்பற்றப்படுவதை அனைத்து தேர்தல் அலுவலர்களும் உறுதி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு தொகுதியிலும், மாவட்ட வருவாய் அலுவலர், போலீஸார், வீடியோ கேமராமேன் ஆகியோரைக் கொண்ட ஒரு பறக்கும் படை நியமிக்கப்பட்டுள்ளது. மது பாட்டில்கள் கடத்தல், பணத்தை எடுத்துச் செல்வது போன்றவற்றை தடுக்க ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு நிலைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் செலவினத்தை கணக்கிட ஏதுவாகவும், தேர்தல் நன்னடத்தை விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் வீடியோ கேமராமேன்கள் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொகுதிக்கு 3 வகையான குழுக்கள் என மொத்தம் 48 கண்காணிப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பு செய்வதற்காக 8 ஐஏஎஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க அனைத்து அலுவலர்களும், காவல்துறையும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் மாநகர காவல்துறை கூடுதல் ஆணையர் சேஷசாயி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.