Last Updated : 31 Dec, 2021 02:15 PM

 

Published : 31 Dec 2021 02:15 PM
Last Updated : 31 Dec 2021 02:15 PM

மதுரையில் எலி கடித்த பெண்ணுக்கு  ரூ.25 ஆயிரம் இழப்பீடு: உயர் நீதிமன்றம் உத்தரவு

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை | கோப்புப் படம்.

மதுரையில் எலி கடித்த பெண்ணுக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்கிட உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சைப்பெற வந்த பெண் எலி கடித்த நிலையில் தனக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

மதுரையைச் சேர்ந்த முத்துலட்சுமி, உயர் நீதிமன்ற கிளையில் 2014-ல் தாக்கல் செய்த மனு:

மதுரையில் 19.1.2014-ல் நிகழ்ந்த சாலை விபத்தில் என் மகன் சுரேஷ் காயமடைந்தார். அதற்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை உள் நோயாளியாக சிகிச்சை பெற்றார். அப்போது மகனுக்கு துணையாக நானும் மருத்துவமனையில் இருந்தேன். மகன் படுக்கை அருகே தூங்கிக் கொண்டிருந்தபோது எனது இடது முழங்காலில் எலி கடித்தது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முறையாக பராமரிப்பு பணிகள் நடைபெறுவதில்லை. இதனால் எலிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எலி கடித்ததால் பாதிக்கப்பட்ட எனக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் வாதிடும் போது, மனுதாரர் ''ஜனவரி 23-ல் தன்னை எலி கடித்ததாக கூறுகிறார். அப்போது அவர் மருத்துவர்களிடம் தெரிவிக்கவில்லை. ஜன. 31-ம் தேதி தான் சிகிச்சை பெற்றுள்ளார். மனுதாரர் உடலில் எலி கடித்ததற்கான காயம் இல்லை. மருத்துவமனை சுகாதாரத்தை பாதுகாப்பது தொடர்பாக ஆலோசனைக்குழு அவ்வப்போது ஆய்வு நடத்தி நிறைவேற்றி வருகிறது'' என்றார்.

இதையடுத்து, ''மருத்துவமனையில் தூய்மை மற்றும் சுகாதாரம் நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. எதிர்பாரா விபத்து நிகழும் போது இழப்பீடு வழங்க வேண்டும். இதனால் எலி கடிக்கு ஆளான மனுதாரர் இழப்பீடு பெற தகுதியானவர். மனுதாரருக்கு சுகாதாரத்துறை முதன்மை செயலர் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்'' என நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x