Published : 31 Dec 2021 01:44 PM
Last Updated : 31 Dec 2021 01:44 PM

விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் பணியைக் கைவிடுக: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சென்னை: விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் பணியைத் தமிழக அரசு கைவிட வேண்டும் எனத் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் சண்முகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அதிமுக ஆட்சிக் காலத்தில் மீட்டர் பொருத்தப்பட்டபோது விவசாயிகளின் கடும் எதிர்ப்பின் காரணமாக அந்தப் பணி நிறுத்தப்பட்டது. அப்போது திமுகவும் அதை எதிர்த்து அறிக்கை வெளியிட்டது.

மீட்டர் பொருத்துவது எதிர்காலத்தில் இலவச மின்சாரம் என்பது பறிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு மின்துறை அமைச்சர் அளித்துள்ள விளக்கம் விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. மீட்டர் பொருத்தப்பட்டாலும், இலவச மின்சாரம் தொடரும் என்று அமைச்சர் கூறியிருப்பதை ஏற்க முடியாது என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.

ஏற்கெனவே, மத்திய பாஜக அரசு மின்சாரத் திருத்த மசோதா 2020-ன் மூலம் இலவச மின்சாரம், மானிய விலையில் மின்சாரம் என்பதை எல்லாம் ரத்து செய்து அனைத்து மின் இணைப்புகளுக்கும் கட்டணம் என்று குறிப்பிட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், மீட்டர் பொருத்துவது அந்த நிலையை உறுதிப்படுத்துவதாகவே உள்ளது. கட்டணம் வசூலிக்கப்படாது என்றால் எதற்காகப் பல கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து மீட்டர் பொருத்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

எனவே, விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கிடும் வகையில், விவசாய மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் நடவடிக்கையைக் கைவிட முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

அதேபோல், மேலும் மேலும் பொதுமக்கள் மீது கடும் நிதிச் சுமையை ஏற்றும் வகையில் மின்சார வாரியம் வழங்கும் அனைத்து சேவைகளுக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை 2017-ம் ஆண்டு முதல் முன் தேதியிட்டு வசூலிக்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள உத்தரவையும் தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோருகிறது" என்று சண்முகம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x