Published : 31 Dec 2021 12:12 PM
Last Updated : 31 Dec 2021 12:12 PM

2024 பொதுத்தேர்தலில் மத்திய பாஜக அரசை அகற்றுவதற்கு புத்தாண்டு ஒரு தொடக்கமாக அமையட்டும்: கே.எஸ். அழகிரி

சென்னை

சென்னை: ஓரணியில் திரண்டு 2024 பொதுத் தேர்தலில் மத்திய பாஜக அரசை அகற்றுவதற்கு வருகிற புத்தாண்டு ஒரு தொடக்கமாக அமையட்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் .அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கையில், “கடந்த சில ஆண்டுகளாக இந்திய மக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வந்தனர். கரோனா பரவல் காரணமாக பாதிப்புகளும், மனித உயிரிழப்புகளும் மிகுந்த வேதனைகளை உண்டாக்கியது. இதனால் மக்களிடையே அச்சமும், பீதியும் பெருகியது. இதிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்கு சரியான அணுகுமுறையை பாஜக அரசும், அன்றைய தமிழக அரசும் கையாளவில்லை. இதைத் தொடர்ந்து பொருளாதாரப் பின்னடைவுகளும் மக்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதித்துள்ளது. இதிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. ஆட்சிப் பொறுப்பேற்றது முதற்கொண்டு, கடந்த ஆறு மாதங்களாக கரோனா பரவலைத் தடுப்பதில் தமிழக அரசு பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது.

நடப்பு புத்தாண்டில் தமிழகத்தில் புதிய ஆட்சி மலர்ந்து மக்கள் அரசின் நலன்சார்ந்த திட்டங்களினால் பெரும் பயனை அடைந்து வருகிறார்கள். எந்த சேதாரமும் இல்லாமல் மக்கள் நலத் திட்டங்கள் பயனாளிகளுக்கு முழுமையாகச் சென்றடைகின்றன. இதனால், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் காரணமாக வளர்ச்சிப் பாதையை நோக்கிப் பயணிக்கிற வாய்ப்பு உருவாகியிருக்கிறது. அதே நேரத்தில், மத்திய பாஜக அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை காரணமாக தமிழகம் பல நிலைகளிலும் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. வெள்ள நிவாரண ஒதுக்கீட்டில் புறக்கணிப்பு, இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, கூட்டாட்சித் தத்துவத்திற்கு உலை வைக்கிற நடவடிக்கைகள், நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தராத போக்கு என மாநில நலன்களுக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

இத்தகைய அவல நிலைகளிலிருந்து தமிழகத்தைக் காப்பாற்றுகிற பொறுப்பும், கடமையும் எண்ணற்ற வெற்றிகளைக் குவித்து வருகிற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இருக்கிறது. அதனை நிறைவேற்றுகிற வகையில் ஒருங்கிணைந்து ஓரணியில் திரண்டு 2024 பொதுத் தேர்தலில் மத்திய பாஜக அரசை அகற்றுவதற்கு வருகிற புத்தாண்டு ஒரு தொடக்கமாக அமையட்டும். தமிழக மக்கள் அனைவருக்கும் மனப்பூர்வமான ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x