Published : 31 Dec 2021 07:36 AM
Last Updated : 31 Dec 2021 07:36 AM

ஆங்கில புத்தாண்டையொட்டி இன்று நள்ளிரவு 12 மணி வரை கோயில்கள் திறந்திருக்க அனுமதி

ஆங்கில புத்தாண்டையொட்டி இன்று நள்ளிரவு 12 மணிவரை கோயில்களை திறந்து வைக்க அரசு அனுமதி அளித்துள்ளது என்று அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர், உலகளந்த பெருமாள், குமரகோட்டம் சுப்பிரமணியர் ஆகிய கோயில்களில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். பஞ்சுப்பேட்டையில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

கோயில் மாநகரமான காஞ்சிபுரம், அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நகராக உள்ளது. கோயிலுக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு 2 ஏக்கர் பரப்பளவில் புதிய வாகன நிறுத்தும் இடம் அமைக்க உள்ளோம்.

சுற்றுலா மேம்பாட்டு கழகத்தால் கட்டப்பட்ட யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதி, தற்போது இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவர உள்ளோம். தங்கும் விடுதிக்கு சொந்தமான காலி இடங்களில் சிறிய பூங்காக்கள், கண்கவர் வண்ணங்களில் நீர்வீழ்ச்சிகள் போன்ற அமைப்பு கள் ஏற்படுத்தப்படும். பக்தர்கள் தங்குவதற்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி, 2 மாதங்களில் விடுதியை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய கோயில்கள் குறித்தும் 3 முதல் 5 நிமிட காணொலி தயாரித்து அவற்றை பொதுமக்களிடம் கொண்டு செல்ல உள்ளோம். முதல்கட்டமாக பழநி, சமயபுரம், ராமேசுவரம் கோயில்கள் குறித்த காணொலி தயாரிக்கப்பட்டுள்ளது. முதலில் 47 முதல்நிலை கோயில்களில் இதை தயாரித்து வருகிறோம். இதைத் தொடர்ந்து புராதன கோயில்களின் வரலாறும் காணொலியாக தயாரிக்கப் படும்.

ரூ.100 கோடி ஒதுக்கீடு

தெப்பக் குளங்கள், கோயில் பூங்காக்கள், நந்தவனங்களை புனரமைக்கவும், திருத்தேர்களை சரிபார்ப்பதற்கும் ரூ.100 கோடியை முதல்வர் ஒதுக்கியுள்ளார். இதில் 250 கோயில்கள் சீரமைக்கப்படும். கோயிலுக்கு இடங்கள் இருந்தால் புதிய குளங்கள் உருவாக்கப்படும்.

ஐடெல் விங் மூலம் காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விக்கிரகங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். 5 ஆண்டுகளுக்கு மேல் கோயிலில் பணி செய்பவர்களை திருக்கோயிலின் சட்ட திட்டத்துக்கு உட்பட்டு பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இந்து சமய அறநிலையத்துறையின் சொத்துகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆங்கில புத்தாண்டையொட்டி ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கோயில்கள் 31-ம் தேதி (இன்று) நள்ளிரவு 12 மணிவரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக் கவசம் அணிந்து சுவாமியை தரிசிக்கலாம்.

இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.

இந்த ஆய்வின்போது இந்து சமய அறநிலையத் துறை ஆணை யர் ஜெ.குமரகுருபரன், சுற்றுலாத் துறை மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ம.சுதாகர், காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.சுந்தர் (உத்திரமேரூர்), சி.வி.எம்.பி.எழிலரசன் (காஞ்சிபுரம்) மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதி கள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x