Published : 31 Dec 2021 08:40 AM
Last Updated : 31 Dec 2021 08:40 AM

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வரவேற்றார்.

அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன், எஸ்.ரகுபதி, அர.சக்கரபாணி, சிவ.வீ.மெய்யநாதன், எஸ்.எஸ்.சிவசங்கர், அரசு தலைமைக் கொறடாகோவி.செழியன், எம்பிக்கள்பழநி மாணிக்கம், செ.ராமலிங்கம், சண்முகம், அப்துல்லா, எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், க.அன்பழகன், க.அண்ணாதுரை, அசோக்குமார், நீலமேகம், ஜவாஹிருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், 44,525 பேருக்கு ரூ.238.40 கோடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, ரூ.894.56 கோடியில் 134 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.98.77 கோடியில் முடிவுற்ற 90 பணிகளை பயன்பாட்டுக்கு திறந்துவைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

வீடு தேடி வரும்

தஞ்சாவூர் பெரியகோயிலை கட்டிய ராஜராஜசோழனின் சிலையை கோயிலுக்குள் நிறுவ கருணாநிதி முயற்சி செய்தார். ஆனால், அப்போதைய மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது. இதனால், ராஜராஜசோழன் சிலையை பெரிய கோயிலுக்கு வெளியே நிறுவினார் கருணாநிதி. போராட்ட வீரராக கருணாநிதியை மாற்றி, பெரிய தலைவராக மாற்றியதில் தஞ்சைக்கு பெரும் பங்கு உண்டு.

தற்போது தமிழகத்தில் கரோனா மெல்ல தலைதூக்க தொடங்கியுள்ளது. வெளிமாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்தாலும் தமிழகத்தில் கட்டுக்குள்தான் உள்ளது. எனினும், இந்த விழாவை தள்ளி வைக்கலாமா என்று ஆலோசித்து, பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்த பிறகே இந்த விழா நடத்தப்படுகிறது. இன்று ஓரிருவருக்கு மட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. மீதம் உள்ளவர்களுக்கு 3 நாட்களில் அரசு அதிகாரிகள் வீடு தேடி வந்து வழங்குவர்.

காவிரியில் தமிழகத்துக்கான நீர்ப்பங்கீட்டை இடைக்கால தீர்ப்பு மூலம் அப்போதைய முதல்வர் கருணாநிதி பெற்றுத் தந்தார். மேலும், தமிழகத்துக்கு சரியாக தண்ணீர் வருகிறதா என கண்காணிக்க,கண்காணிப்பு ஆணையத்தையும் அமைக்க காரணமாக இருந்தவர் கருணாநிதி. காவிரி உரிமையை பாதுகாத்த இயக்கம் திமுக.

புகாருக்கு இடமளிக்க கூடாது

நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கையை ஏற்று, மாத ஊதியமாக பட்டியல் எழுத்தருக்கு ரூ.5,285, உதவியாளர்களுக்கு ரூ.5,218 என உயர்த்தி வழங்கப்படும். இதில், அகவிலைப்படி ரூ.3,499-ம் சேர்த்து வழங்கப்படும். இதேபோல, சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டைக்கு ரூ.3.25 என்பது ரூ.10 என உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக ரூ.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. எனவே, கொள்முதல் பணியாளர்கள் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் பணியாற்ற வேண்டும்.

தமிழகத்தை முன்னேறிய மாநிலமாக மாற்றி காட்டுவதே லட்சியம்.அதை இலக்காக கொண்டு பயணித்து வருகிறோம். இந்த இலக்கை நோக்கிய பயணத்தில் முதல் 6 மாதத்தில் பெரிய வெற்றியை தமிழக அரசு பெற்றுள்ளது என்றார்.

விழா அரங்கில் தஞ்சாவூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் வீணை உள்ளிட்ட 9 பொருட்களின் கண்காட்சி அரங்கையும், விழா முடிந்த பின்னர் சரஸ்வதி மகால் நூலகத்தையும் முதல்வர் பார்வையிட்டார்.

ரூ.1084.69 கோடியில் திட்டங்கள்

திருச்சியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு முனையம் மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட ரூ.604 கோடி மதிப்பிலான 532 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, சீர்மிகு திட்டத்தின்கீழ் புதுப்பிக்கப்பட்டுள்ள சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட ரூ.153.21 கோடி மதிப்பிலான 203 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், பல்வேறு துறைகளின் கீழ் ரூ.327.48 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x