

சத்தியமங்கலம் சார்பு நீதிமன்ற பெண் ஊழியருக்கு, வீட்டுவேலைகளை செய்வது தொடர்பாக சார்பு நீதிபதி வழங்கியதாகக் கூறப்படும் குறிப்பாணை சமூக வலைத்தளங்களில் நேற்று வெளி யானது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்க லம் சார்பு நீதிமன்ற நீதிபதி வெளி யிட்டதாக கூறப்படும் ஒரு குறிப் பாணை, ‘வாட்ஸ்-அப்’ போன்ற சமூக வலைதளங்களில் நேற்று பரவியது. சத்தியமங்கலம் சார்பு நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றும் எஸ்.வசந்தி என்பவருக்கு பிப்ரவரி 1-ம் தேதி அந்த குறிப்பாணை வழங்கப்பட்டதாக அந்த தகவல் தெரிவிக்கிறது. குறிப்பாணையில், ‘சார்பு நீதிபதியின் வீட்டில் சரிவர துணி துவைப்பதில்லை என்றும், இதுகுறித்து கேட்டபோது எதிர்த்து பேசியதாகவும்’ நீதிமன்ற ஊழியர் வசந்தி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள் ளது. அத்துடன், ‘உங்கள் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தட்டச்சு செய்யப்பட்ட அந்த குறிப்பாணை யில் சத்தியமங்கலம் சார்பு நீதிபதி டி.செல்வத்தின் கையொப்பம் இடப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வெளி யான இந்த நீதிமன்ற குறிப்பாணை உண்மையானதா என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில், செய்தியாளர் கள் சத்தியமங்கலம் சார்பு நீதிமன்ற ஊழியர் வசந்தியிடம் இந்த ஆணை குறித்து கேட்டனர். அப்போது அவர், ‘சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஓராண்டுக்கு மேலாக பணி செய்து வருவதாகவும், நீதிபதி வீட்டில் கூட்டிப்பெருக்குதல், பாத் திரம் தேய்த்தல், துணி துவைத்தல் போன்ற பணிகளை செய்து வரு வதாகவும்’ தெரிவித்தார். துணி துவைப்பது தொடர்பாக தனக்கு குறிப்பாணை வழங்கப்பட்டது உண்மை என தெரிவித்த வசந்தி, ‘இந்த குறிப்பாணையை பெற்ற பிறகு, இனிமேல் இதுபோன்று நடந்துகொள்ள மாட்டேன்’ என எழுதி கொடுத்துவிட்டேன். அதன் பிறகு தொடர்ந்து பணிபுரிந்து வரு கிறேன்’ என தெரிவித்தார். குறிப் பாணை விவரம் குறித்து சத்திய மங்கலம் சார்பு நீதிபதி டி.செல் வத்தை சந்திக்க பத்திரிகையாளர் கள் முயற்சி செய்தபோது, அவர் சந்திக்க விரும்பவில்லை என்று நீதி மன்ற ஊழியர்கள் தெரிவித்தனர்.
மனித உரிமை மீறிய செயல்
இதுகுறித்து தமிழ்நாடு நீதித்துறை ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் பி.கருணாகரன் கூறியதாவது: நீதிபதிகளிடம் பணிபுரியும் அலுவலக உதவியாளர்களை அலுவலகப் பணிக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். ஆனால், நீதிபதிகளின் வீட்டு வேலைக்கு அவர்களைப் பயன்படுத்துகின்றனர். ஏறக்குறைய தமிழ்நாடு முழுவதும் இந்த நிலைதான் உள்ளது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சார்பு நீதிமன்ற நீதிபதி செல்வம் வீட்டில் உள்ளாடைகளை துவைக்காமல் தூக்கிவைத்த காரணத்துக்காக அந்த நீதிமன்ற அலுவலக உதவியாளர் வசந்திக்கு ‘மெமோ’ கொடுக்கப்பட்டுள்ளது. இது பெரும் கவலை அளிக்கிறது. ‘உள்ளாடைகளை ஏன் துவைக்கவில்லை’ என்று நீதிபதியின் துணைவியார் கேட்டுள்ளார். நீதித்துறைக்கு சம்பந்தம் இல்லாத அவர், ‘ஏன் உள்ளாடைகளை துவைக்கவில்லை’ என்று அரசு ஊழியரை கேள்வி கேட்டிருப்பது மனித உரிமை மீறிய செயலாகும்.
பெரும்பாலான துறைகளில் அலுவலக உதவியாளரை வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் போக்கு நிறுத்தப்பட்டுவிட்டது. அண்மையில் காவல்துறையிலும் ‘ஆர்டர்லி’ என அழைக்கப்படும் முறை ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், நீதித்துறையில் இன்னமும் நீடிப்பது வேதனை அளிக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் சென்னை உயர் நீதிமன்றமும், தமிழக அரசும் உடனடியாக தலையிட வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம் சார்பில் உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் மற்றும் ஈரோடு மாவட்டத்துக்கு பொறுப்பு வகிக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி நாகமுத்து ஆகியோருக்கு தபால் மூலம் மனு அனுப்புவோம். நேரில் சந்தித்தும் வலியுறுத்துவோம் என்றார் கருணாகரன்.