

பிழைப்புக்காக உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று அங்குள்ள நாணயங்கள், கரன்சிகளை சேகரித்து தனது வீட்டின் ஒற்றை அறைக்குள் காட்சிப்படுத்தியிருக்கிறார் புதுகை பட்டதாரி.
உலகைச் சுற்றிப் பார்க்க வேண்டு மென்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். அதில் சிலருக்கு மட்டுமே பல நாடுகளை சுற்றிப்பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். அப்படி புதிய இடங்களில் கிடைத்ததை சேகரிக்கும் பழக்கம் வெகு சிலரிடம் மட்டுமே இருக்கும்.
அந்த வகையில், பிழைப்புக்காக பல நாடுகளுக்குச் சென்றதில் சுமார் 100 நாடுகளில் உள்ள விதவித மான நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், அஞ்சல் தலைகளை சேகரித் துள்ளதோடு, `விடுபட்டதை சேர்க்க வேண்டும் அதுதான் எனது லட்சியம்’ என்கிறார் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள செரிய லூர் இனாம், காசிம் புதுப்பேட்டை யைச் சேர்ந்த முதுநிலை பட்டதாரி எஸ்.சி. பசீர் அலி.
“கடந்த 1980-களில் எனது தந்தை வெளிநாட்டில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது நான் கல்லூரியில் எம்எஸ்சி (விலங்கியல்) படித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனது தந்தை வெளிநாட்டில் இருந்து அனுப்பும் கடிதத்தில் ஒட்டியுள்ள பலவிதமான அஞ்சல் தலைகளை பாடப்புத்தகங்களுக்குள் வைத்து சேகரிக்கத் தொடங்கினேன். இதுவே எனக்கு ஆர்வத்தை ஏற் படுத்தியது. அதன்பிறகு அஞ்சல் தலைகள் மட்டுமின்றி ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள நாணயம், கரன்சிகளையும் சேகரிக்க வேண்டு மென்ற ஒரு வேட்கை எனக்குள் உருவானது.
அதற்கு அச்சாரமாக அமைந்தது எனது தந்தை வைத்திருந்த மலேசிய நாட்டு கரன்சிதான். அதன் பிறகு நான் பிழைப்புக்காக சிங்கப்பூர், மலேசியா, சவுதி, இலங்கை, சீனா போன்ற பல நாடு களுக்குச் சென்றபோது அங்கெல் லாம் கிடைத்ததைச் சேகரித்தேன். போகாத நாடுகளின் கரன்சிகளை யும் சேகரித்துள்ளேன். இதற்காக கோயில்களில் உண்டியல் திறக்கப் படுவதாக அறிந்தால் அதையும் விட்டுவைப்பதில்லை. அந்த வகை யிலும் பல நாடுகளைச் சேர்ந்த நாணயங்கள், கரன்சிகளை சேகரித் துள்ளேன்.
ஆசிய கண்டத்தில் உள்ள 43 நாடு கள், ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள 21 நாடுகள், ஐரோப்பிய கண்டத் தில் உள்ள 26 நாடுகள், ஆஸ்திரேலி யா உள்ளிட்ட 103 நாடுகளில் உள்ள பல வகையான கரன்சி நோட்டுகளை சேகரித்துள் ளேன். மேலும், 64 நாடுகளில் உள்ள பல வகையான நாணயங்கள், 53 நாட்டின் அஞ்சல் தலைகளும் எனது சேகரிப்பில் உள்ளன.
இத்தகைய சேகரிப்பின் மூலம் இந்திய தலைவர்களை, நமது தமிழ்மொழியை வெளிநாட்டவர்கள் எந்த அளவுக்கு நேசித்து இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன்.
இந்திய கரன்சிகளில் தொடக்கத் தில் அங்கீகரிக்கப்பட்ட 7 மொழி களில் 5-வது இடத்தில் இருந்த தமிழ், தற்போது 13-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால், மொரீசியஸ் நாட்டை ஆண்ட தமிழரான ரெங்கநாதன் சீனிவாச னுக்கு மரியாதை செலுத்தும் வகை யில் அந்நாட்டு கரன்சியில் அவரது படத்துடன் எண்ணாலும், எழுத்தா லும் தமிழில் பொறிக்கப்பட்டு, கடந்த 2007-ல் 25 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது. இதே போல பல நாடுகளில் தமிழுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
நாணயங்களில் புதுக்கோட்டை அம்மன் காசு, தலைவர்கள், அறிஞர் கள் படத்துடன்கூடிய சுமார் 500 வகையான நாணயங்களும் உள்ளன.
இப்படியாக தொடர்ந்து 34 ஆண்டுகளாக சேகரித்து எனது வீட்டில் ஓர் அறையில் வைக்கப் பட்டுள்ள இந்த பொக்கிஷங்களை விவரம் தெரிந்த வெளிநாட்டைச் சேர்ந்தோர் பார்த்துச் செல்கின்றனர். இதை கோடிக்கணக்கிலான மதிப்பு உடையதாக நான் கருதுவதால் இதை வீட்டைவிட்டு வேறு எங்கும் எடுத்துச் செல்வதில்லை. எனது இலக்கு என்னிடம் உலக நாடுகளில் உள்ள நாணயங்கள், கரன்சிகள் அனைத்தும் இருக்கின்றன என்ற நிலையை அடைய வேண்டு மென்பதுதான் என்றார் பசீர் அலி.