Published : 14 Mar 2016 08:46 AM
Last Updated : 14 Mar 2016 08:46 AM

எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நாளை தொடக்கம்: 11 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இத்தேர்வை 11 லட்சத்து 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 5-ம் நாளான இன்று (திங்கள்கிழமை) வேதியியல், கணக்குப்பதிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி முடிவடைகிறது. இத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3,371 மையங்களில் 11 லட்சத்து 20 ஆயிரத்து 749 பேர் எழுதுகிறார்கள். இவர்களில் பள்ளிகளில் படிப்பவர்கள் 10 லட்சத்து 72 ஆயிரத்து 185 பேர். இதில் மாணவர்கள் 5 லட்சத்து 51 ஆயிரத்து 301 பேர். மாணவிகள் 5 லட்சத்து 20 ஆயிரத்து 884 பேர். வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு, மாணவிகளின் எண்ணிக்கையை விட மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி மாணவ, மாணவிகள் தவிர, தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 564 பேர் தேர்வு எழுதுகின்றனர். புதுச்சேரியில் மட்டும் 48 மையங்களில் 17 ஆயிரத்து 41 மாணவ, மாணவிகள் 10-ம் வகுப்பு தேர்வில் கலந்துகொள்கிறார்கள்.

தேர்வுக் கூடங்களில் காப்பி அடித்தல், பிட் அடித்தல் உள்ளிட்ட ஒழுங்கீனச் செயல்கள் நடைபெறா வண்ணம் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பறக்கும் படையினர் தேர்வு மையங்களுக்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொள்வர். இது தவிர, மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகிய வருவாய்த் துறை அதிகாரிகளும், மாவட்டக் கல்வி அதிகாரிகள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் ஆகியோரும் தேர்வு மையங்களில் ஆய்வு செய்வார்கள்.

சென்னை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 213 மையங்களில் 53 ஆயிரத்து 159 பேர் எழுதவிருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அனிதா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x