Published : 31 Dec 2021 07:53 AM
Last Updated : 31 Dec 2021 07:53 AM

சென்னை, செங்கை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் கரோனாவை தடுக்க கடும் கட்டுப்பாடுகள்: தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை, தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த ஒரு வாரமாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மாநகராட்சி துணை ஆணையர்கள் எஸ்.மனிஷ், விஷுமகாஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர், சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சர்வதேச அளவில் ஒமைக்ரான் வேகமாகப் பரவுகிறது. மும்பையில் தினமும் 2,500 பேர், டெல்லியில் 1,000 பேர், பெங்களூருவில் 500 பேருக்கு தொற்று பரவுகிறது. சென்னையில் இந்த எண்ணிக்கை 294-ஆக உள்ளது.

எனவே, மாநகரில் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மாநகராட்சி ஆணையருடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டோம். இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே, மத்திய சுகாதாரத் துறை கடிதம் அனுப்பியுள்ளது.

அதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தொற்று பரவலைத் தடுக்க, கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பரிசோதனைகளை அதிகரிக்கவும், மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்தவும், கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மருத்துவ முகாம்களை நடத்தவும், தடுப்பூசி போடுவதை அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

மாநகராட்சி சார்பில் தினமும் 25 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. தொற்று அறிகுறி இருப்பவர்களுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பரிசோதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். அதற்காக பொதுமக்கள் பதற்றம் அடையத் தேவையில்லை.

திருமண நிகழ்ச்சிகள், உணவகங்களில் கரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். அதுபோன்ற பழக்கங்களை பின்பற்றினாலே தொற்று குறைந்துவிடும்.

மத்திய அரசு மருத்துவக் கட்டமைப்புகளை வலுப்படுத்துமாறு கூறியுள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே 1 லட்சத்து 15 ஆயிரம் படுக்கை வசதிகள் உள்ளன. சென்னையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளே 10 ஆயிரம் உள்ளன. 222 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களும் உள்ளன. 1,700 டன் ஆக்ஜிசன் சேமிக்கும் மையங்களும் உள்ளன.

முதல் இரு அலைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றதற்கு மக்களின் ஒத்துழைப்புதான் முக்கியக் காரணம். அதேபோல, தற்போதும் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அமலாக்க குழுக்கள்

மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறும்போது, "சென்னை மாநகரில் ஒவ்வொரு மண்டலத்துக்கும் 3 மண்டல அமலாக்கக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள் உள்ளிட்ட பொதுஇடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா என ஆய்வு செய்து, விதிமீறலில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்கும்" என்றார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x