காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் மே மாதத்துக்குள் தீர்வு காண வேண்டும்: முத்தரசன்

காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் மே மாதத்துக்குள் தீர்வு காண வேண்டும்: முத்தரசன்

Published on

காவிரி நதி நீர் பங்கீடு வழக்கில் மே மாதத்துக்குள் தீர்வு காண உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுக வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக 40 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சனை நீடித்து வருகிறது. நதி நீர் பங்கீடு குறித்து தமிழக அரசு தொடுத்துள்ள அனைத்து வழக்குகளையும் 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற தனி அமர்வு விசாரித்து வருகிறது. இந்த அமர்வின் முதல் விசாரணை நேற்று நடைபெற்றது.

இதில் கர்நாடக அரசின் வழக்கறிஞர் ஆஜராகி வாதங்களை முன்வைக்க அவகாசம் கேட்டுள்ளார். தமிழக அரசின் தரப்பில் இதற்கு ஆட்சேபனை எதுவும் தெரிவிக்காத செயல் கண்டனத்துகுரியது. இதையடுத்து வழக்கின் விசாரணை ஜூலை 19-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜூன் 12-ல் காவிரி பாசனத்துக்காக மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு தண்ணீர் வழங்க மறுத்து வருவதால் காவிரி பாசன பகுதிகளில் சம்பா, குறுவை சாகுபடி பாதிக்கிறது. இதனால் கடன் சுமை அதிகரித்து விவசாயிகள் பலர் தற்கொலை செய்துக் கொள்கின்றனர். எனவே, மே மாத இறுதிக்குள் வழக்குகளில் தீர்வு காண தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டும்'' என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in