Published : 31 Dec 2021 08:19 AM
Last Updated : 31 Dec 2021 08:19 AM

வடசென்னை அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகளால் திருவொற்றியூர், பொன்னேரியில் நீர், நிலம், காற்று மாசுபட்டுள்ளது: தேசிய பசுமை தீர்ப்பாய வல்லுநர் குழுவிடம் பொதுமக்கள் குமுறல்

பொன்னேரி

வடசென்னை அனல் மின் நிலையசாம்பல் கழிவுகளால் திருவொற்றியூர், பொன்னேரி வட்டப்பகுதிகளில் நீர், நிலம், காற்று மாசுபட்டுள்ளது என்று தேசிய பசுமை தீர்ப்பாய வல்லுநர் குழுவினரிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர்அருகே அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின்நிலையத்தின் சாம்பல் கழிவுகளால் பக்கிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலை ஆறு உள்ளடக்கிய கழிமுகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, எண்ணூர் பகுதியைச் சேர்ந்த ரவிமாறன் கடந்த 2016-ல் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் மனுத்தாக்கல் செய்தார். அந்த வழக்கில் 2017-ல் பசுமை தீர்ப்பாயம் நியமித்த நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, எண்ணூர் கழிமுகப் பகுதியில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனக்கூறி, தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை சமீபத்தில் நடந்தது.

அப்போது, தமிழக திட்டக்குழு முன்னாள் துணைத் தலைவரான சாந்த ஷீலா நாயர் தலைமையில், சென்னை ஐஐடி பேராசிரியர்கள் பாலாஜி நரசிம்மன், இந்துமதி நம்பி, சென்னை கிறிஸ்தவக் கல்லூரி முன்னாள் தாவரவியல் பேராசிரியர் நரசிம்மன், கேர் எர்த் அமைப்பைச் சேர்ந்த ஜெய வெங்கடேசன், கடல்சார் உயிரியல் நிபுணர், தமிழக சுற்றுச்சூழல் துறைஇயக்குநர், மத்திய - மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பிரதிநிதிகள் அடங்கிய வல்லுநர் குழுவை பசுமை தீர்ப்பாயம் அமைத்தது.

இக்குழு, எண்ணூர் கழிமுகத்தில் சாம்பல் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உள்ளிட்டவை குறித்து விரிவான திட்ட அறிக்கையை 4 மாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என, பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இந்நிலையில், வல்லுநர் குழுவினர் நேற்று, வடசென்னை அனல்மின் நிலையம் சாம்பல் கழிவுகளைக் குழாய் மூலம் மீஞ்சூர் அருகே செப்பாக்கம் சாம்பல் குட்டையில் சேமித்து வைத்துள்ளதையும், சாம்பல் குழாய் செல்லும் பகுதிகளையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, வல்லுநர் குழுவினர் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்கும் கூட்டம் கத்திவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், எண்ணூர், பழவேற்காட்டைச் சுற்றியுள்ள மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள், திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.சங்கர் என, 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் மீனவர்கள் உள்ளிட்டவர்கள் கூறியதாவது:

வடசென்னை அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகளை, செப்பாக்கத்துக்கு எடுத்துச் செல்லும் குழாய்கள் தரமற்றவையாக உள்ளதால், அவை அடிக்கடி உடைந்து, சாம்பல் கழிவு பக்கிங்ஹாம் கால்வாய், கொசஸ்தலை ஆற்றுக்குச் செல்வதால், கால்வாய் மற்றும் ஆறு அடைபட்டுள்ளன.

இந்த சாம்பல் கழிவுகளால் எண்ணூர் கழிமுகப் பகுதியில் உள்ள அலையாத்தி காடுகள் அழிந்துவிட்டன. இதனால் பறவைகள் வருவதில்லை. இறால்மீன் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே, மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

திருவொற்றியூர், பொன்னேரி வட்டப் பகுதிகளில் நீர், நிலம், காற்று மாசுபட்டுள்ளது. இதனால், மக்கள் நுரையீரல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் வடசென்னை அனல் மின் நிலையத்தை இங்கிருந்து, அப்புறப்படுத்த வல்லுநர் குழு பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கூட்டத்தின் நிறைவாகப் பேசிய வல்லுநர் குழு தலைவர் சாந்த ஷீலா நாயர், "கூட்டத்தில் முன் வைக்கப்பட்ட கருத்துகள் மற்றும் எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்துறை வல்லுநர்களின் கருத்துகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பொதுமக்களுக்கு நலன் பயக்கும் வகையில் விரிவான ஆய்வறிக்கையை பசுமை தீர்ப்பாயத்திடம் சமர்ப்பிப்போம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x