

சென்னை மாநகராட்சி சார்பில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வீடு வீடாகச் சென்று ‘வைட்டமின் ஏ’ டானிக் வழங்கப்பட்டு வருகிறது. 2 நாட்களில் 1 லட்சத்து 77 ஆயிரத்து 898 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், உடல் வளர்ச்சிக்கும் தேவையான ஒரு முக்கிய ஊட்டச்சத்து வைட்டமின் ஏ. இந்த வைட்டமின் குறைபாட்டால் மாலைக்கண் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்கும் பொருட்டு நாடு முழுவதும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங் களில், 6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ டானிக் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த திங்கள்கிழமை முதல் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ வழங்கப்பட்டு வருகிறது.
சுகாதாரத்துறை அதிகாரி தகவல்
இது தொடர்பாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 6 மாதம் முதல் 5 வயதுக்கு உட்பட்ட 5 லட்சம் குழந்தைகள் உள்ளனர். அனைத்து மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கடந்த 2 நாட்களாக வைட்டமின் ஏ வழங்கப்பட்டு வருகிறது. 2 நாட்களில் 1 லட்சத்து 77 ஆயிரத்து 898 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை தவிர்த்து 26-ம் தேதி வரை வழங்கப்படும்.
தற்போது 100 சதவீத இலக்கை எட்டும் வகையில், அங்கன்வாடி மையங்கள் உதவியுடன் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மூலமாக வீடு வீடாகச் சென்று குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ வழங்கி வருகிறோம்” என்றார்.