Published : 31 Dec 2021 09:45 AM
Last Updated : 31 Dec 2021 09:45 AM

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பது உறுதியானது: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த மதுரை மாநகராட்சி ஏற்பாடு

மதுரை மாவட்டத்தில் அவனியா புரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றவை. உள்ளூர் முதல் உலகப் பார்வையாளர்கள் வரை போட்டியை கண்டு ரசிப்பார்கள். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை சுற்றுலாத் துறை பஸ்களில் அழைத்து சென்று ஜல்லிக்கட்டு பார்க்க ஏற்பாடு செய்யும்.

கடந்த பொங்கல் பண்டிகை யின்போது கரோனா தொற்று தீவிரமாக இருந்தபோதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டன.

இந்நிலையில் நடப்பாண்டு ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்திலும் இத் தொற்று தற்போது சமூகப் பரவலை அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது என்று தமிழக அரசு மருத்துவர்கள் சங்கம் சுகாதாரத் துறையிடம் முறையிட்டது. எனவே ஜல்லிக்கட்டு நடக்குமா?, நடக் காதா? என்ற குழப்பம் நீடித்தது.

இந்நிலையில் ஜன.14-ம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக மதுரை மாநகராட்சி தனியாருக்கு டெண்டர் விட்டுள்ளது. இதையடுத்து ஜல்லிக்கட்டு நடப் பது உறுதியாகி உள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த அரசு வழிகாட்டுதல்படி தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை (தடுப்புகள், பார்வையாளர் மாடம், ஓய்விடம், தற்காலிக மருத்துவமனை போன்றவை) ஆண்டுதோறும் மதுரை மாநக ராட்சி செய்து வருகிறது. இது வழக்கமான நடைமுறையே. போட்டிக்கான ஏற்பாடுகளுக்குத்தான் டெண்டர் விடப்பட்டுள்ளதே தவிர, போட்டியை விழா கமிட்டியும், மாநகராட்சியும் இணைந்து நடத் தும். அதில் எந்த மாற்றமும் இல்லை’’ என்றனர்.

போட்டி ஒருங்கிணைப்பு மட்டுமே விழா கமிட்டி

விழா கமிட்டி நிர்வாகிகளிடம் பேசியபோது, போட்டியை நடத்துவதில் இரு பிரிவினரிடையே 2 ஆண்டுகளாக மோதல் ஏற்பட்டு வருகிறது. மேலும் பரிசுப் பொருட்கள், நன்கொடை பெறுவதில் முறைகேடு நடப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கூறினர். அதனால் நன்கொடை, பரிசுப் பொருட்களை வருவாய்த் துறையினரிடம் ஒப்படைத்து அவர்கள் பதிவு செய்து ரசீது வழங்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. நன்கொடை வழங்குபவர்கள், வருவாய்த் துறை நிர்வகிக்கும் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும். விழா கமிட்டி போட்டிகளை ஒருங்கிணைக்க மட்டுமே செய்கிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x