Published : 30 Dec 2021 11:08 AM
Last Updated : 30 Dec 2021 11:08 AM

அதிகரிக்கும் கரோனா; பள்ளிகளில் நேரடி வகுப்புகளை கைவிட்டு, ஆன்லைன் வகுப்பை நடைமுறைப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், நிலைமை சீரடையும் வரை, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் நேரடி வகுப்புகளை கைவிட்டு ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் கரோனா சோதனைகளையும், தடுப்பூசி செலுத்துவதையும் அதிகரிக்க வேண்டும்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக சென்னையின் தினசரி கரோனாத் தொற்று நேற்று ஒரு நாளில் மட்டும் 51% அதிகரித்திருக்கிறது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு அதனால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதே நேரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் அவசியம்.

தமிழ்நாட்டில் தினசரித் தொற்றுகளின் எண்ணிக்கை நேற்று ஒரு நாளில் மட்டும் 120, அதாவது 19.38% அதிகரித்திருக்கிறது. சென்னை, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் தினசரி கரோனா தொற்று எண்ணிக்கை நேற்று அதிகரித்துள்ளது. இவற்றில் 9 மாவட்டங்கள் வட தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. சென்னையில் தினசரித் தொற்று 194 என்ற எண்ணிக்கையிலிருந்து 294 ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாவட்டத்தில் கடந்த மாதம் 29-ஆம் தேதி 105 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை இந்த மாதம் 29-ஆம் தேதி கிட்டத்தட்ட மும்மடங்காக, அதாவது 294 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரத்தில் நேற்று மட்டும் தினசரி தொற்றுகளின் அளவு 73 விழுக்காடும், திருவள்ளூர் மாவட்டத்தில் 33 விழுக்காடும் அதிகரித்துள்ளன. இந்த எண்ணிக்கை அச்சமும், கவலையும் அளிக்கக்கூடியவை என்பதை மருத்துவர்கள் மறுக்க மாட்டார்கள்.

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதை தனித்துப் பார்க்க முடியாது. தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை உலக அளவில் அமெரிக்காவில் 4.65 லட்சமாகவும், பிரான்ஸ் 2.08 லட்சம், இங்கிலாந்து 1.83 லட்சம், ஸ்பெயின் 1 லட்சம் என்ற அளவில் பெரும் அலையாக பரவி வருவதையும், கேரளத்தில் சுமார் மூவாயிரம் என்ற அளவுக்கு அதிகரித்து இருப்பதையும் கணக்கில் கொண்டு தான் தமிழக தொற்று எண்ணிக்கை உயர்வை பார்க்க வேண்டும்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருப்பதற்கு ஓமைக்ரான் வகை கரோனா வேகமாக பரவத் தொடங்கியிருப்பது தான் காரணம் என்பது அனைவரும் அறிந்தது தான். இந்தியாவில் இது மூன்றாவது அலையை உருவாக்கும் என்று நோயியல் வல்லுனர்கள் கணித்துள்ளனர். சென்னையில் தினசரி கரோனா வைரஸ் பரவல் 51% அளவுக்கும், காஞ்சிபுரத்தில் 73% அளவுக்கும் அதிகரித்திருப்பது மூன்றாவது அலை பரவலின் விளிம்பில் தமிழ்நாடு இருப்பதையே காட்டுகிறது. இனி வரும் நாட்களில் கரோனா பரவல் இன்னும் பல மடங்கு அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதை உணர்ந்து கொண்டு, கரோனா மூன்றாவது அலையைத் தடுக்க வட மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் இரவு நேர ஊரடங்கு, பள்ளிகளுக்கு விடுமுறை போன்ற தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் இதுவரை ஓமைக்ரான் வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 80 விழுக்காட்டினர் இரு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என்று மத்திய அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இரு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையே ஓமைக்ரான் எளிதாக தாக்கும் போது, இதுவரை ஒரு தவணை தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளாத பள்ளிக் குழந்தைகளின் நிலையை நினைத்தால் மிகவும் கவலையாக உள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிக்குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்றால், நிலைமை சீரடையும் வரை பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிப்பது தான் சரியான தீர்வாக இருக்கும்.

கரோனா பரவலைத் தடுக்க தில்லி உள்ளிட்ட சில மாநிலங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து உள்ளன. பல மாநிலங்களில் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மையான மாநிலங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து ஆய்வு செய்து வருகின்றன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள் சரியாக நடக்காத நிலையில், நடப்பாண்டிலாவது மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதைத் தடுக்க நேரடி வகுப்புகள் தான் சரியான முறையாக இருக்கும். ஆனால், கரோனா புதிய அலையால் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளுடன் ஒப்பிடும் போது, நேரடி வகுப்புகளை கைவிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் குறைவு என்பது தான் உண்மை.

எனவே, தமிழ்நாட்டில் நிலைமை சீரடையும் வரை, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் நேரடி வகுப்புகளை கைவிட்டு ஆன்லைன் முறையில் வகுப்புகளை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் கரோனா சோதனைகளையும், தடுப்பூசி செலுத்துவதையும் அதிகரிக்க வேண்டும். மற்றொரு புறம் பொதுமக்கள் வெளியில் செல்வதைத் தவிர்த்தல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கைகளை கழுவுதல் உள்ளிட்ட கரோனா முன்னெச்சரிக்கைகளை பின்பற்ற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x