Published : 30 Dec 2021 07:53 AM
Last Updated : 30 Dec 2021 07:53 AM

கதைகள் திரைப்படங்களாகும்போது அதிக கவனம் பெறுகின்றன: நூல் வெளியீட்டு விழாவில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு கருத்து

கல்கியின் பார்த்திபன் கனவு மற்றும் தோப்பில் முகமது மீரானின் கதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த நூல்களை ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு சென்னையில் வெளியிட்டார். உடன் மொழிபெயர்ப்பாளர் நந்தினி விஜயராகவன், நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் மற்றும் மினி கிருஷ்ணன்.படம் க.ஸ்ரீபரத்

சென்னை

கதைகளும், நாவல்களும் திரைப்படங்களாக எடுக்கப்படும்போது அதிக கவனம் பெறுகின்றன என்று நூல் வெளியீட்டு விழாவில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு கூறியுள்ளார்.

மறைந்த எழுத்தாளர் தோப்பில் முகமது மீரானின் சிறுகதைகளை ‘மீரான்ஸ் ஸ்டோரீஸ்’ என்ற தலைப்பில் ஓய்வுபெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவனும் கல்கியின் ‘பார்த்திபன் கனவு’ நாவலை ‘பார்த்திபன்ஸ் ட்ரீம்’ என்ற தலைப்பில் நந்தினி விஜயராகவனும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளனர்.

இந்த இரு மொழிபெயர்ப்பு நூல்களையும் ரத்னா புக்ஸ் பதிப்பித்துள்ளது. இரு நூல்களின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு நூல்களை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறும்போது, "தோப்பில் மீரானின் கதைகளும், கல்கி கிருஷ்ணமூர்த்தியின் ‘பார்த்திபன் கனவு’ நாவலும் ஒரு காலத்தில் பலராலும் மிகுந்த ஆர்வத்தோடு வாசிக்கப்பட்டவை. இன்றைய காலத்தில் நூல்கள் வாசிக்கும் பழக்கும் வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்த படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் இன்றைய இளைய தலைமுறையினரை அதிகம் வாசிக்க வைக்கும். கதைகளும், நாவல்களும் திரைப்படங்களாக எடுக்கப்படும்போது அவை அதிக கவனம் பெறுகின்றன. தோப்பில் முகமது மீரானின் சிறுகதைகள் நம்முடைய வாழ்வில் நடந்த சம்பவங்களை அப்படியே சொல்வது போல் இருக்கின்றன" என்றார்.

மொழிபெயர்பாபளர்கள் இருவரும் ஏற்புரை ஆற்றினர். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கல்வி ஆலோசகர் மினி கிருஷ்ணன், நூல்களை பதிப்பித்த ரத்னா புக்ஸ் முதுநிலை ஆலோசகர் தர் பாலன் அறிமுகவுரை ஆற்றினார். செயல் இயக்குநர் தினேஷ் சின்ஹா நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x