Published : 30 Dec 2021 08:21 AM
Last Updated : 30 Dec 2021 08:21 AM

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடையில்லை: நாளை இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மது விற்க, பார்களில் அருந்த தடை

புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்க ளுக்கு தடையில்லை என தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், அதேநேரம் நாளை இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மதுபானங்களை விற்கவோ அல்லது பார்களில் மது அருந்தவோ கூடாது என தடை விதித்துள்ளது.

புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பாக்கம் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவ ரான ஜெகந்நாதன் மற்றும் புதுச்சேரி மாநில தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்த தர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘புதுச்சேரியில் புத்தாண்டுகொண்டாட்டங்களுக்கு அனுமதியளிக்கப் பட்டுள்ளது. கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலைக் கருத்தில் கொண்டு அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா கோவா ஆகிய மாநிலங்களில் புத்தாண்டைக் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் ஏற்கெனவே கரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் ஒமைக்ரான் பாதிப்பும் சிலருக்கு உள்ளது. எனவே பொதுநலனைக் கருத்தில் கொண்டுபுதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்க ளுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தனர்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் எஸ்.வைத்யநாதன், டி. பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வில் நடந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வழக்க றிஞர் எம்.ஞானசேகர் ஆஜராகி, “கடற்கரை சுற்றுலாத் தலமான புதுச்சேரியில் புத் தாண்டு கொண்டாட்டங்களுக்காக திரையுலக பிரபலம் சன்னி லியோன் வரவழைக்கப்பட்டுள்ளார். ஒமைக்ரான் பரவல் காரண மாக உலகமே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக் கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் மட்டும்புத்தாண்டை மது விருந்துடன் வரவேற்கதிட்டமிடப்பட்டுள்ளதால் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிகமானோர் புதுச்சேரியில் குவிந்து வருகின் றனர். ஏற்கெனவே வெளிநாட்டவர்களும் விடுதிகளை முன்பதிவு செய்துள்ளனர். இதனால் கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் கட்டுக்கடங்காமல் சென்று வி்டும்.இதற்காக கடற்கரை சாலையில் பொதுபோக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட் டுள்ளது. எனவே பொதுநலனைக் கருத் தில் கொண்டு புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார்.

புதுச்சேரி அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் எஸ்.மாலா ஆஜராகி வாதிடுகை யில், “புதுச்சேரியில் புத்தாண்டை வரவேற்க 3 மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டு விட்டது. நட்சத்திர விடுதிக ளுக்கு வெளிநாட்டினர் ஏற்கெனவே வந்துவிட்டனர். புத்தாண்டு கொண்டாட்டங்க ளின் மூலமாக அரசுக்கும் வருவாய் அதிகரித்து வருகிறது. பிற அண்டை மாநிலங்களைப் போன்று புதுச்சேரியில் நிலைமை அவ்வளவு மோசமாக இல்லை. கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் கட்டுக்குள்தான் உள்ளது. ஏற்கெனவே புதுச்சேரி அரசு கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. புத் தாண்டு கொண்டாட்டத்துக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு மேல் யாருக்கும் அனுமதியில்லை. சமூக இடைவெளி உள் ளிட்ட விஷயங்களை கண்டிப்பாக கடை பிடிக்கவும், கண்காணிப்பு பணியில் பட்டாலியன் போலீஸாரை ஈடுபடுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

காந்தி ஜெயந்தியில் மது விற்பனை

அப்போது நீதிபதி எஸ்.வைத்யநாதன் குறுக்கிட்டு, “மது விற்பனையை கட்டுக் குள் கொண்டு வராவிட்டால் போதையில் எல்லை மீறல்கள் அதிகரித்து விடும். நான் வழக்கறிஞராக இருந்தபோது காந்தி ஜெயந்தி தினத்தன்று போலீஸார் முன்னிலையிலேயே சென்னை வில்லி வாக்கம் பகுதியில் மதுபானங்கள் விற் கப்பட்டன” என கருத்து தெரிவித்தார்.

பின்னர் நீதிபதிகள், ‘‘புதுச்சேரியில் ஏற்கெனவே 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உள்ளது. இந்தச் சூழலில் புத் தாண்டு கொண்டாட்டமா அல்லது பொதுமக்களின் நலனா என்றால் கண்டிப்பாக பொது நலனைத்தான் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. இதில் எவ்வித சமரசமும் செய்ய இயலாது. அதேநேரம் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டங்க ளுக்கோ அல்லது உணவகங்களில் உணவு வகைகளை பரிமாறவோ நாங்கள் தடை விதிக்கவில்லை. மதுபானக்கடைகள் மற்றும் பார்கள், நட்சத்திர விடுதிகளுடன் கூடிய பார்களில் டிச.31 (நாளை) இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை 3 மணி நேரம் மதுபானங்களை விற்கவோ அல்லது மது அருந்தவோ கூடாது என தடை விதிக்கிறோம்.

இரு தடுப்பூசி அவசியம்

அதேபோல பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபடு பவர்கள் கட்டாயம் 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ்களை வைத்திருக்க வேண் டும். முகக்கவசம், தடுப்பூசி உள்ளிட்ட கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை புதுச்சேரி அரசு கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும்.

திரையுலக அல்லது முக்கிய பிரபலங்களை பொது இடங்களில் அனுமதிக் கக்கூடாது. விடுதிகளில் ஏற்கெனவே முன்பதிவு செய்திருப்பவர்கள் அங்கு தங்க எவ்வித தடையும் இல்லை. மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை புதுச்சேரி அரசு ஜன.3 அன்று தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்னர்.

நாளை இரவு 12.30-க்குள் கடற்கரை சாலையை மூட ஆட்சியர் உத்தரவு

புத்தாண்டு கொண்டாட்டங்களில் கரோனா விதிமுறைகளை பின்பற்றுவது, கட்டுப்பாடுகளுடன் கண்காணிப்பது தொடர்பாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தலைமை வகித்தார். முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஷ்வரன், நகராட்சி ஆணையர் சிவக்குமார் உள்ளிட்ட முக்கியத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் ஆட்சியர் கூறியதாவது:

புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம், கிருமிநாசினி, சமூக இடைவெளி கடைபிடிப்பதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டப் பகுதிகளுக்கும், நட்சத்திர உணவகங்கள், சொகுசு விடுதிகள் போன்றவற்றில் பங்கேற்பவர்கள் கட்டாயம் 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை பரிசோதித்து உறுதி செய்த பிறகே அனுமதிக்க வேண்டும். விழா நடக்கும் மொத்த இடப்பரப்பில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கும் வகையில் விழா ஏற்பாட்டாளர்கள் முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும். மதுவகைகளை 18 வயதுக்கு கீழ் உள்ளோருக்கு வழங்கவோ, விற்பனை செய்யவோ கூடாது.

கரோனா இரவு நேர ஊரடங்கு உத்தரவு டிச.30 முதல் ஜன.2 ம் தேதி வரை, தினசரி அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை இருப்பதை பின்பற்ற வேண்டும். குறிப்பாக டிச.31ம் தேதி (நாளை) இரவு 12.30 மணிக்குள் கடற்கரை சாலையை மூடி, புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளை முடித்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x