இரு மாநில பிரச்சினையாகும் டாஸ்மாக் மதுக்கடை: தொடர் போராட்டத்தில் கேரள பழங்குடி பெண்கள்

இரு மாநில பிரச்சினையாகும் டாஸ்மாக் மதுக்கடை: தொடர் போராட்டத்தில் கேரள பழங்குடி பெண்கள்
Updated on
2 min read

கோவை அருகே மாநில எல்லையில் உள்ள அரசு மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி கேரள மாநில பழங்குடி பெண்கள், பச்சிளங் குழந்தைகளுடன் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள கேரளப் பகுதி அட்டப்பாடி. ஊட்டச்சத்துக் குறைபாட்டால் நூற்றுக்கும் அதிகமான உயிர்களை பலி கொண்ட பகுதியாகவும், மாவோயிஸ்ட்கள் ஊடுருவல் இருக்கும் இடமாகவும் மட்டுமே அறியப்பட்டிருந்தது. இந்நிலையில் இங்குள்ள மலைக் கிராம பழங்குடி மக்களை, தமிழக எல்லையில் இருக்கும் அரசு டாஸ்மாக் மதுக்கடை நிம்மதி இழக்கச் செய்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை மாவட்டத்துக்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலையில் இரு மாநில எல்லையில் அமைந்துள்ள கிராமம் ஆனைக்கட்டி. இங்கு தமிழகப் பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அரசு மதுக்கடை அமைக்கப்பட்டது. இக்கடை அமைக்கப்பட்ட பிறகு, தமிழக எல்லை மட்டுமல்லாது கேரளத்தின் அட்டப்பாடி பகுதி மக்கள் குடிக்கு ஆளாகி வருவதாக புகார் உள்ளது. மது அருந்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உயிரிழப்புகளும் அதிகரிப்பதாகக் கூறுகின்றனர்.

இந்நிலையில், பொறுமையிழந்த கேரள பழங்குடி பெண்கள், அரசு மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கடந்த மாதம் 17-ம் தேதி தொடங்கி, பல்வேறு வடிவங்களில் இந்த போராட்டம் நடந்து வந்தது. கேரளத்தின் பாலக்காடு மாவட்ட ஆட்சியரும், தமிழகத்தின் கோவை மாவட்ட ஆட்சியரும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் உரிய நடவடிக்கை இல்லை எனக்கூறி, தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு இப் போராட்டம் தொடங்கியது. நேற்று சுமார் 20-க்கும் மேற்பட்ட பெண்கள், தங்களது பச்சிளங் குழந்தைகளுடன் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ராங்கி என்ற பழங்குடி பெண் கூறும்போது, ‘நாளுக்கு நாள் மது குடிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஏற்கெனவே அட்டப்பாடி பழங்குடி மக்கள் பல பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் கேரள அரசு கள்ளுக்கடையைக் கூட இங்கு திறக்கவில்லை. ஆனால் எங்கள் சூழ்நிலையைத் தெரிந்தும்கூட எல்லையோரத்தில் மதுக்கடையை தமிழக அரசு அமைத்துள்ளது. மது பிரச்சினையால், இளம் விதவைகள் எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே வருகிறது.

இன்று இது எங்கள் பிரச்சினையாக தெரிகிறது. வரும் காலத்தில் இருமாநில மக்களும் பாதிக்கப்படுவார்கள். தமிழக - கேரள மலைவாழ் மக்களின் நலனுக்காகவே இந்த போராட்டத்தைத் ஆரம்பித்திருக்கிறோம். தீர்வு கிடைக்குமென நம்பி போராடுகிறோம்’ என்றார்.

கேரள சமூக ஆர்வலர் முருகேசன் கூறும்போது, ‘2012-ல் இருந்து இதுவரை இங்கு 114 பேர் ஊட்டச் சத்துக் குறைபாட்டால் உயிரிழந்துள்ளனர். மதுக்கடை வந்தபிறகு, பாதிப்பு மேலும் அதிகமாகியுள்ளது. 2 வருடத்தில் 145 பேரும், போராட்டம் தொடங்கிய பிறகும் கூட 7 பேரும் மதுவால் உயிரிழந்திருப்பது வேதனையானது. தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் 1,32,320 பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். அதில் பெரும்பாலான இடங்களில் மது பிரச்சினை இருக்கிறது. பழங்குடி மக்களின் நலனைக் காக்கும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

டாஸ்மாக் மதுக்கடைகளால் மக்கள் பாதிக்கப்படுவதாக தமிழகத்தில் பல போராட்டங்கள் நடந்துள்ளன. ஆனால் இந்த மதுக்கடைகளால் மாநில எல்லையைத் தாண்டியும் பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கு கேரள மாநில பழங்குடி மக்கள் போராட்டமே உதாரணம்.

நாளொன்றுக்கு ரூ.4 லட்சம் விற்பனை

டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பில் விசாரித்தபோது, ‘ஆனைகட்டியில் உள்ள மதுக்கடையில் நாளொன்றுக்கு ரூ.4 லட்சம் வரை சராசரியாக விற்பனை நடப்பதாகவும், மாவட்டத்தில் அதிக வருமானம் தரக்கூடிய முதல் 10 கடைகள் பட்டியலில் இக்கடையும் ஒன்று’ என்கின்றனர். மேலும் மாநில எல்லையில் வனப் பகுதியினுள் இருப்பதால், போலீஸார் கெடுபிடி குறைவு. 24 மணி நேரமும் இயங்கும் எனவும் அவர்கள் கூறுகின்றனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in