

இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி வரும் 18-ம் தேதி சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக மீனவர்களை பூண்டோடு அழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இலங்கை கடற்படை செயல்பட்டு வருகிறது. இலங்கை நட்பு நாடு என்று சொல்லும் மத்திய அரசு, தமிழக மீனவர்களை விடுதலை செய்வதற்கு துளியும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தது. தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை கைது செய்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இது தொடர்பாக முதல்வர் பல முறை கடிதம் எழுதியும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, இலங்கை சிறையில் வாடும் அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்க ளின் படகுகளையும் உடனே விடுவிக்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட் டத்தை வரும் 18-ம் தேதி காலை 10 மணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்தவுள்ளது.