விஜயகாந்தை இப்போதும் அழைக்கிறோம்: வைகோ பேட்டி

விஜயகாந்தை இப்போதும் அழைக்கிறோம்: வைகோ பேட்டி
Updated on
2 min read

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்காக மக்கள் நல கூட்டணி விடுத்த அழைப்பு இன்னமும் உயிர்ப்புடனேயே இருப்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தனித்துப் போட்டி என விஜயகாந்த் அறிவித்துவிட்டார். இந்நிலையில் மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் சென்னையில் கூடி அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர்.

ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக வைகோ 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "விஜயகாந்தின் அறிவிப்பு தொடர்பாக நான், தொல்.திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன் ஆகியோர் விவாதித்தோம்.

ஏற்கெனவே நாங்கள் விஜயகாந்தை எங்கள் கூட்டணியில் இணையுமாறு அழைத்திருந்தோம். தற்போது அவர் தனித்துப் போட்டி என்ற அறிவித்திருந்தாலும், மீண்டும் அவருக்கு அழைப்பு விடுவது என முடிவெடுத்துள்ளோம்.

தமிழகத்தில் ஊழலை ஒழிக்கவும், மதுவிலக்கை அமல்படுத்தவும் தேமுதிகவுக்கு கூட்டணி அழைப்பு விடுப்போம். எங்கள் அழைப்பை ஏற்பதும், ஏற்காததும் அவரது முடிவு.

திமுகவின் கூட்டணி அழைப்பை விஜயகாந்த் நிராகரிப்பார் நாங்கள் எதிர்பார்த்தோம். கடந்த 2011-ல் திமுகவை அப்புறப்படுத்த விஜயகாந்த் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்தார். அப்போது ஊழல் கறை படிந்த திமுக மீதான அதிருப்தி பார்வை மக்கள் மத்தியில் இன்னமும் விலகவில்லை. எனவே, விஜயகாந்த் திமுக அழைப்பை நிராகரிப்பார் என எதிர்பார்த்தோம்" என்றார்.

'ஸ்டாலின் பரிதாபத்துக்குரியவர்'

திமுக பொருளாளர் ஸ்டாலின், மக்கள் நலக் கூட்டணியை அதிமுகவின் பினாமி என விமர்சித்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வைகோ, "ஸ்டாலின் பரிதாபத்துக்குரியவர். மக்கள் நலக் கூட்டணியை அதிமுகவின் பினாமி என விமர்சிக்கும் இதே நேரத்தில் அவரை நான் ஏன் 2ஜி ஊழலின் பினாமி என அழைக்கக்கூடாது. இப்போது விஜயகாந்த் திமுக அழைப்பை புறக்கணித்திருப்பதால் அவரையும் அதிமுகவின் பினாமி என ஸ்டாலின் அழைப்பாரா?" என வினவினார்.

'அதிமுகவுக்கு 30; திமுகவுக்கு 3'

நீங்கள் திமுகவை தாக்கிப் பேசுவதுபோல் அதிமுக விமர்சிப்பதில்லை எனக் கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, "இது ஸ்டாலின் ஆதரவாளர்கள் திட்டமிட்டு பரப்பும் அவதூறு. அதிமுகவை 30 நிமிடங்கள் விமர்சித்தால், திமுகவை மூன்று நிமிடங்கள் மட்டுமே விமர்சிக்கிறேன். வேண்டும் என்றால் திமுகவினரை என் பொதுக்கூட்டத்துக்கு வந்து பார்க்கச் சொல்லுங்கள்" என்றார்.

'மாற்றத்துக்காக மக்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்'

திமுக, அதிமுக அல்லாத அரசியல் மாற்றத்துக்கு தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்ற கேள்விக்கு, "தமிழக அரசியல் போக்கு மாறிவிட்டது. திமுக, அதிமுகவை மக்கள் வெறுக்கின்றனர். எனவே, மாற்றத்துக்காக தமிழக மக்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்" எனத் தெரிவித்தார்.

'பரஸ்பர நம்பிக்கையும், மரியாதையுமே காரணம்'

மக்கள் நலக் கூட்டணி ஒரு வெற்றிகரமான மாற்றியக்கமாக இருக்கும் நான் கூறுவதற்கு எங்கள் கூட்டணி கட்சிகளிடையே நிலவும் பரஸ்பர நம்பிக்கையும், மரியாதையுமே காரணம். அழகாக பிண்ணப்பட்ட கூட்டியக்கம் எங்களுடையது. இத்தகைய ஒற்றுமையான கூட்டணி தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இருந்ததில்லை. எங்கள் கூட்டு முயற்சி இறுதியில் வெற்றி பெறும் என நம்புகிறோம் என வைகோ கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in