Published : 29 Dec 2021 05:26 AM
Last Updated : 29 Dec 2021 05:26 AM

தமிழகத்தின் கிராமப்புறங்களில் கண்புரை, விழித்திரை பாதிப்பு அதிகரிப்பு: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கிராமப்புறங்களில் கண்புரை, விழித்திரை பாதிப்பு அதிகமாக உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் தெரிவித்தார்.

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் சேலம்,ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கான பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவ பிரிவினை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று தொடங்கி வைத் தனர்.

சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, சென்னை அரசு பொது மருத்துவமனை டீன் தேரணிராஜன், எழும்பூர் அரசு கண் மருத்துவமனை இயக்குநர் மலர்விழி, எழும்பூர் எம்எல்ஏ இ.பரந்தாமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகம் முன்னோடி மாநிலம்

தமிழகம், பார்வை இழப்பு விகிதத்திலும், கண் உயர் சிகிச்சை அளிப்பதிலும், முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. 50 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களிடம் பார்வை குறைபாடு தேசியவிகிதம் 1.19 ஆகும். நமது மாநிலத்தில் அவ்விகிதம் 1.18 ஆக உள்ளது. ஆனாலும் கிராமப்புறங்களில் கண்புரை பாதிப்பு, சர்க்கரை நோய் விழித்திரை பாதிப்பு, நீர் அழுத்த நோய் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.

இக்குறையை தீர்ப்பதற்கு நமது அரசு ரூ.90 லட்சம் மதிப்பில் முதல் முறையாக மூன்று மாவட்டங்களில் உயர்தர பல்நோக்கு நடமாடும் கண் மருத்துவ பிரிவை ஏற்படுத்தி உள்ளது. இதன்மூலமாக, தினந்தோறும் கிராமப்புறங்களில் முகாமிட்டு, மக்களிடம் கண் நோய்களுக்கு பரிசோதனை செய்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தேவைக்கேற்ப நோயாளிகளை இவ்வாகனத்தின் மூலம் அருகில்உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை வழங்கப்படும்.

ஆலோசனை பெற வசதிகள்

இந்த குளிரூட்டப்பட்ட வாகனத்தில் கணினி கண் பரிசோதனை கருவி, சர்க்கரை நோய் விழித்திரை நிழற்படங்கள் எடுக்கும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இக்கருவிகள் மூலம் சேகரிக்கப்படும் விவரங்கள் இணைய வழி மூலம் மாவட்ட மருத்துவமனையில் உள்ள கண் மருத்துவருக்கு அனுப்பப்பட்டு உடன் ஆலோசனை பெறும் வசதிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

பள்ளி சிறார்களுக்கு 1 லட்சத்து 10,276 இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளன. சென்ற ஆண்டு கரோனா பெருந்தொற்று காரணங்களால் அவசர சிகிச்சை மட்டுமே மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x