Published : 29 Dec 2021 06:48 AM
Last Updated : 29 Dec 2021 06:48 AM

ஒமைக்ரான் பரவல், மருத்துவ கட்டமைப்பு குறித்து சென்னையில் மத்திய குழு 2-வது நாளாக ஆய்வு

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று பரவல் குறித்து ஆய்வு செய்ய சென்னை வந்துள்ள மத்திய குழுவினர் 2-வது நாளான நேற்று சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு சென்று, மருத்துவக் கட்டமைப்புகளை ஆய்வு செய்தனர். மருத்துவமனை டீன் தேரணிராஜன் மற்றும் மருத்துவர்கள் உடன் உள்ளனர்.படம்: க.பரத்

சென்னை

ஒமைக்ரான் தொற்று பரவல் மற்றும் மருத்துவ கட்டமைப்பு குறித்து சென்னையில் 2-வது நாளாக மத்திய குழுவினர் ஆய்வு நடத்தினர்.

தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் கரோனா வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. தமிழகத்தில் 45 பேர் உட்படநாடு முழுவதும் 650-க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, ஒமைக்ரான் பரவல் அதிகம் உள்ள தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், மிசோரம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு மத்திய குழுவினர் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக, மருத்துவர்கள் வினிதா, பர்பசா, எஸ்.சந்தோஷ்குமார், தினேஷ்பாபு ஆகியோர் கொண்ட மத்திய குழுவினர் கடந்த 26-ம் தேதி இரவு சென்னை வந்தனர்.

சென்னை விமான நிலையம், கிண்டிஅரசு கரோனா மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் 27-ம் தேதி ஆய்வுசெய்த மத்திய குழுவினர், சென்னைதேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில்சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறைஇயக்குநர் செல்வவிநாயகம் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், மருத்துவகட்டமைப்பு உள்ளிட்டவை குறித்துகேட்டறிந்தனர். ‘‘டிஎம்எஸ் வளாகத்தில் ரூ.4 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மரபணு ஆய்வகத்தில் ஒமைக்ரான் பரிசோதனை செய்ய அனுமதி அளிக்கவேண்டும். செங்கல்பட்டு, குன்னூரில்தடுப்பூசி மையத்தில் உற்பத்தியை தொடங்க வேண்டும்’’ என குழுவினரிடம்மா.சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், 2-வது நாளான நேற்றுசென்னை வளசரவாக்கம் கற்பகாம்பாள் நகருக்கு சென்று, தமிழகத்தில் முதலாவதாக ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நைஜீரியாவில் இருந்துவந்தவரின் வீடு மற்றும் அருகில் உள்ளஇடங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர், பிற்பகலில் சென்னை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். டவர்-3 கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை வார்டுகளை பார்வையிட்ட குழுவினர், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், ஆக்சிஜன் வசதி, ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளிட்ட மருத்துவ கட்டமைப்பை மருத்துவமனை டீன் தேரணிராஜனிடம் கேட்டறிந்தனர்.

3-வது நாளான இன்று சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்ய குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதன் பிறகு, ஆய்வு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x