Published : 29 Dec 2021 07:41 AM
Last Updated : 29 Dec 2021 07:41 AM

நம்ம ஊரு திருவிழாவை முக்கிய நகரங்களிலும் நடந்த வேண்டும்: வானதி சீனிவாசன் கோரிக்கை

சென்னையில் நடைபெறுவது போன்று நம்ம ஊரு திருவிழாவை மற்ற முக்கிய நகரங்களிலும் நடத்த வேண்டும் என தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு, பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14, 15, 16 ஆகிய மூன்று நாட்களும் சென்னையில் ‘நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் கலை விழா நடைபெறும் என்றும், தமிழகத்தின் பாரம்பரிய கலைகளின் சிறப்புகளை வெளிப்படுத்தும் விதமாக பிரம்மாண்டமாக இந்த கலை விழா நடைபெறும் என்றும் அறிவித்திருப்பதை பாஜக சார்பில் வரவேற்கிறேன்.

கடந்த இரு ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்று தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாட்டுப்புறக் கலைஞர்கள்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட மக்கள் பெருந்திரளாக கூடும் விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. வேறு எந்த வருமானமும் இல்லாமல் அவர்கள் கூலி வேலை செய்ய வேண்டிய அவலத்துக்கு தள்ளப்பட்டனர்.

தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் அந்த பகுதிக்கென்று தனித்துவமான நாட்டுப்புற கலைகள் ஏராளமாக இருக்கின்றன. எனவே, கிராமியக் கலைஞர்களை காப்பாற்றும் வகையிலும், அந்தந்த பகுதியின் நாட்டுப்புறக் கலைகளை காப்பாற்றும் வகையிலும் சென்னையில் நடைபெறுவது போன்று நம்ம ஊரு திருவிழாவை கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர் போன்ற தமிழகத்தின் முக்கிய மாநகரங்களிலும் நடத்த வேண்டும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான கிராமியக் கலைஞர்களும், அவர்களது குடும்பத்தினரும் பயன்பெறுவார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x