Published : 29 Dec 2021 07:14 AM
Last Updated : 29 Dec 2021 07:14 AM

சென்னையில் பக்தர்கள் அதிகம் வரும் கோயில்களில் சமய நூலகம் அமைக்கப்படும்: அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை

சென்னையில் அதிகளவு பக்தர்கள் வரும் கோயில்களில் புதிய சமய நூலகங்கள் ஏற்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் அனைத்து அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை வகித்தார். கூட்டத்தில், சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் துறை செயலாளர் பி.சந்திரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர், பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது 112 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. அதில், 650-க்கும் மேற்பட்ட திருப்பணிகள் மற்றும் இதர பணிகள் இடம்பெற்றிருந்தன. 450-க்கும் மேற்பட்ட கோயில் திருப்பணிகளுக்கு அரசாணை பெறப்பட்டு பணிகள் ஒவ்வொன்றாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை ரூ.1,500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன.

கோயில்களில் தரமான குங்குமம் திருநீர் வழங்குவது, முதலுதவி மையங்கள் ஏற்படுத்துதல், புதுப்பிக்க வேண்டிய குளங்கள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தை திருநாளன்றுகோயிலில் பணியாற்றுபவர் களுக்கு புத்தாடை வழங்குவது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம். 30 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன கோயில்சிலைகள் உட்பட 20 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

பழநி, திருச்செந்தூர், சமயபுரம் போன்ற முக்கிய கோயில்களில் பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருத்தணி, திருவரங்கம், திருவேற்காடு, சமயபுரம் உட்பட 10 கோயில்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பிரசாதம்வழங்குவதற்கான முதல்கட்ட பணி நடைபெற்று வருகிறது.

முதுநிலை கோயில்களில் சூரிய ஒளி வெப்ப விளக்குகள் அமைப்பதற்கு கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயிலுக்கு சொந்தமான சுமார் 114 சமய நூலகங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கோயில்களில் அதிகளவில் பக்தர்கள் வருகை தரும் இடங்களில் புதிய சமய நூலகங்கள் ஏற்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x